பயங்கரவாதத்தை ஒழித்து இயல்பு நிலையை கொண்டுவர முடியும்

RSM
பயங்கரவாதத்தை ஒழித்து இயல்பு நிலையை கொண்டுவர முடியும்-President meets foreign envoys-Pix by Sudath Silva

- பயங்கரவாத சட்டம் பொதுமக்களுக்கு எதிரானதல்ல; ஜனாதிபதி தெரிவிப்பு
- பயங்கரவாதத்தை ஒழிக்க முழுமையாக உதவுவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு

இலங்கையில் தலைதூக்கியிருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்களும் சர்வதேச முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஏகமனதாக உறுதியளித்துள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்ட இலங்கையில் உள்ள தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், ஐ.நா மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் வதிவிடப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய சர்வதேச முகவர் அமைப்புக்களின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த கொடூரமான செயலுக்கு பொறுப்பான குற்றவாளிகளையும் அதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியவர்களையும் கண்டறிந்து கைது செய்வதற்கு பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பயங்கரவாதத்தை விரைவில் ஒழித்துக்கட்ட முடியுமென்று நம்பிக்கை வெளியிட்டார்.

பயங்கரவாதத்தை ஒழித்து இயல்பு நிலையை கொண்டுவர முடியும்-President meets foreign envoys-Pix by Sudath Silva

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அனுபவம்வாய்ந்த, உயர் தொழிநுட்ப மற்றும் புலனாய்வு திறன்களைக் கொண்ட 08 நாடுகள் இலங்கைக்கு உதவுவதற்கு ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட ஏனைய நாடுகளும் உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு முடியுமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் ஏனைய பிரதிநிதிகளும் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா, டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோர் இதன்போது தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

30 வருடங்களாக இடம்பெற்ற போரின்போதும் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வின்போதும் இலங்கை புலனாய்வுத்துறை பெற்றுக்கொண்ட அனுபவங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பயன்படும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நேற்று (22) அமுலுக்கு கொண்டு வரப்பட்ட அவசரகால சட்ட அதிகாரங்களையும் பாதுகாப்பு படையினர் தற்போது பயன்படுத்திக்கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.

பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற முடியுமென்று புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், சாதாரண சட்டங்களின் மூலம் போதுமான சாட்சிகள் இன்றி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதென்றும் ஜனாதிபதி  தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறையை மீளொழுங்குப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு நிபுணத்துவ உதவியைக் கொண்டு பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழித்துக்கட்ட முடியுமென்றும் தான் நம்புவதாக ஜனாதிபதி வலியுறுத்திக் கூறினார்.

சமூக ஊடகங்கள் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று இரவு வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அவசரகால சட்டங்களை சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு தாம் அனுமதியளிக்கப்போவதில்லை என்றும் அவை பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பில் இலங்கைக்கு தமது அனுதாபங்களை தெரிவித்த வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, வெளிவிவகார செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tue, 04/23/2019 - 18:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை