தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை

அரசு தௌிவுபடுத்த வேண்டும்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை தெளிவாக அறிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பியும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டத்துக்கு முரணான வகையில் அவர்கள் 24 வருடங்களுக்கு மேல் விசாரணைகளுமின்றி தண்டனை அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவர்கள் தொடர்பில் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை வெளியிட வேண்டுமென்றும் பாராளுமன்றத்தில் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளவைக் கேட்டுக்கொண்டார்.

அவர்கள் அரசியல் கைதிகள் அல்ல என அரசு கூறிவிடக்கூடாது. அரசாங்கம் எமது கோரிக்கையை மறுக்கவும் கூடாது என குறிப்பிட்ட அவர்,

அவர்களின் விடுதலை தொடர்பான முடிவைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பாராளுமன்றத்தில் நேற்று நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, பொதுநிர்வாகம் இடர்முகாமைத்துவம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்கள் மீதான நிதியொதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஒரு ஆயுள்கைதி 25 வருடங்கள் மட்டுமே சிறையில் இருக்கமுடியும் என்பதே சட்டத்தின் நியதி.

தமிழ் அரசியல்கைதிகள் பயங்கரவாத தடைச் சட்டம் என்ற போர்வையில் 24 வருடங்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகள் எதுவும் இல்லாமலேயே அவர்கள் தொடர்ந்தும் உள்ளனர். இதனால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்தவிடயம் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்றுள்ளது.

அவர்களின் குடும்பங்கள் உணவுக்குக்கூட வழியின்றி பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளன. உள ரீதியாகவும் அக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் விடுதலை உணர்வுடன் உதவி செய்தார்கள் என்ற குற்றத்திற்காக அவர்கள் இவ்வாறு தொடர்ந்தும் சிறையிலடைக்கப்பட்டுள்ளமை சரியானதல்ல.

அவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் ஏதாவது வகையில் உதவிசெய்ய முடியுமா என்பதில் சம்பந்தப்படட அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும. அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். அல்லது அவர்களுக்குப் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை