சர்வதேச அழுத்தத்தை மீறி லிபிய தலைநகரில் தொடர்ந்து மோதல்

யுத்த நிறுத்தம் ஒன்றுக்கான சர்வதேச அழுத்தத்தை மீறி லிபியாவின் கிழக்குப் படைகள் தலைநகர் திரிபோலியை நோக்கி வேகமாக முன்னேறி வருவதோடு தலைநகரில் இயங்கும் ஒரே விமான நிலையத்தின் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் உயிரிழப்பு அதிகரித்திருப்பதோடு எண்ணெய் விநியோகத்திற்கு தடங்கல் ஏற்படும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

லிபியாவில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் இணையாக வெவ்வேறு நிர்வாகங்கள் இயங்கி வரும் நிலையில் அங்கு தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ஐ.நா முயற்சித்திருக்கும் நேரத்திலேயே இந்த மோதல் வெடித்துள்ளது.

கிழக்கில் இருந்து முன்னெறும் முன்னாள் சர்வாதிகாரி முஅம்மர் கடாபி இராணுவத்தில் ஜெனரலாக இருந்த கலீபா ஹ்பதரின் லிபிய தேசிய இராணுவம், சர்வதேச அங்கீகாரம் பெற்ற திரிபோலி அரசை நெருங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அண்மைய மோதல்களில் தமது 19 படையினர் கொல்லப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

தலைநகரின் தெற்காக இடம்பெறும் மோதல்களில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக திரிபோலியை தளமாகக் கொண்ட சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதில் 80 போராளிகள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கிழக்குப் புறநகர் பகுதியில் இருக்கும் மிடிகா விமானநிலைத்தின் மீது கடந்த திங்கட்கிழமை போர் விமானம் ஒன்று குண்டு வீசியுள்ளது. இந்த தாக்குதலை கண்டித்திருக்கும் லிபியாவுக்கான ஐ.நா தூதுவர் கசான் சலம், இது “மனிதாபிமான சட்டத்தை மோசமாக மீறும் செயல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வான் தாக்குதலை உறுதி செய்திருக்கு ஹப்தர் படை, தமது படை சிவில் விமானங்களை இலக்கு வைக்கவில்லை என்றும் மிடிகாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிக் விமானத்தையே இலக்கு வைத்ததாகவும் அது கூறியது.

திரிபோலி விமான நிலையத்திற்கு மாற்றாக அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு 200 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் மிஸ்ரட்டா விமான நிலையமே ஒரே தேர்வாக உள்ளது.

லிபியாவின் பெங்காசி நகரைத் தளமாகக் கொண்ட போட்டி அரசின் ஆதரவுடைய ஹம்தரின் லிபிய தேசிய இராணுவம் எண்ணெய் வளம் கொண்ட தென் பகுதியை இந்த ஆண்டு ஆரம்பத்தில் கைப்பற்றிய பின்னரே திரிபோலியை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளது.

எனினும் தலைநகரைக் கைப்பற்றுவது அதிக சவால் கொண்டதாக உள்ளது. தலைகரத்தின் தெற்காக வான் தாக்குதல்களை நடத்தும் ஹப்தர் படை பயன்படுத்தப்படாத முன்னாள் சர்வதேச விமானநியத்தில் இருந்து வீதி ஒன்றின் ஊடாக முன்னேற முயற்சித்து வருகிறது.

எனினும் இந்தப் படை கடந்த திங்கட்கிழமை பழைய விமானநிலைத்தின் கட்டுப்பாட்டை இழந்து விமானநிலைய வீதியை நோக்கி பின்வாங்கி இருப்பதாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். திரிபோலி அரசுக்கு ஆதரவான படையை விமானநிலைத்திற்குள் காணமுடிந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை வாபஸ் பெறுவதற்கு முன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹப்தர் படை விமானநிலையத்தை கைப்பற்றி தலைநகர மையத்தை 11 கிலோமீற்றர்கள் நெருங்கியதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

லிமிய தேசிய படையிடம் இருந்து தலைநகரை பாதுகாக்க பிரதமர் பாயேஸ் அல் சர்ராஸ் ஆயுதப் போராளிகளுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து மிஸ்ரட்டாவில் இருந்து போராளிகளை ஏற்றிய டிரக் வண்டிகள் இயந்திர துப்பாக்கிகளுடன் திரிபோலியை விரைந்துள்ளன.

தலைநகர மையத்தில் இருந்து தென்மேற்காக துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மத்தியஸ்தத்திலான உடன்படிக்கை ஒன்றின் மூலம் சர்ராஜ் 2016 ஆம் ஆண்டு தொடக்கம் திரிபோலியில் ஆட்சியில் உள்ளார். எனினும் இந்த உடன்படிக்கையை ஹப்தர் புறக்கணித்துள்ளார்.

இந்த சிங்கலான தருணத்தில் ஐ.நா உதவி வழங்கும் வழிகள் பற்றி சர்ராஜை சந்தித்து ஐ.நா தூதுவர் சலம் கடந்த திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த வன்முறைகள் காரணமாக இதுவரை 3,400 பேர் வரை இடம்பெயர்ந்திருப்பதோடு அவசர உதவிகளை வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த வன்முறைகளால் லிபியாவில் தேர்தல் ஒன்றை நடத்துவது மற்றும் குழப்பங்களை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து வரும் ஏப்ரல் 14–16 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு ஐ.நா திட்டமிட்ட மாநாடு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி ஹப்தரின் முன்னேற்றத்தை நிறுத்தும்படியும் பேச்சுவார்த்தைக்கு திரும்பும்படியும் ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றில், அமெரிக்கா மற்றும் ஜ7 நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளன.

தம்மை பயங்கரவாதத்திற்கு எதிரானவர் என்று காட்டிக்கொள்ளும் ஹப்தர், கடாபிக்கு பின் மற்றொரு சர்வாதிகாரியாக உருவெடுக்க முயற்சிப்பதாக எதிர்ப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Wed, 04/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை