புலனாய்வுத் தகவல்கள் ஏன் தெரிவிக்கப்படவில்லை; தெரிவுக்குழு அவசியம்

லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்

தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்ட புலனாய்வுத் தகவல்கள் உரிய தரப்பினருக்கு ஏன் தெரியப்படுத்தப்படவில்லை என்பதை ஆராய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என

 சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறட்டும் என்பதற்காக புலனாய்வு அறிக்கை குறித்து அதிகாரிகள் மௌனமாக இருந்துள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தை அங்கீகரிப்பது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பாதுகாப்புச் சபை முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சபையில் உள்ளவர்களுக்கு அரசியல் செய்யும் அதிகாரத்தை யார் வழங்கியது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்தபோது பாதுகாப்புச் சபையைக் கூட்டியபோது அதன் உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை. இறுதியில் பிரதமர் தானாகவே பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று கூட்டத்தை நடத்தினார். நாம் அரசியல்வாதிகள் என்பதால் அரசியலில் ஈடுபட முடியும். பாதுகாப்புச் சபையிலிருந்தவர்கள் எவ்வாறு அரசியல் செய்ய முடியும். அவர்களை யார் நெறிப்படுத்துகின்றனர்.

புலனாய்வுப் பிரிவினரின் எச்சரிக்கை அறிக்கை ஏன் உரிய தரப்பினருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது குறித்து விசாரிப்பதற்கு சபாநாயகர், பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும். வேண்டுமென்றே குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறட்டும் என்பதற்காக புலனாய்வாளர்கள் மௌனமாக இருந்துள்ளனர் என்றும் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலையில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்காது அனைவரும் ஒன்றிணைந்த செயற்பட வேண்டியுள்ளது.

முஸ்லிம் சமூகத்தினர் தற்பொழுது அஞ்சி வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிங்களவர்களாகிய நாம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

எமது தரப்பிலும் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன அவற்றைத் திருத்திக்கொண்டு சரியான பாதையில் செல்லவேண்டும். கண்டி திகன பிரதேசத்தில் வன்முறைகள் ஏற்படும்போதும் அவற்றைக் கட்டுப்படுத்தாமல் பாதுகாப்புத் தரப்பினர் மௌனமாகவிருந்தனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

 

Thu, 04/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை