நாம் எதிர்க்கட்சியிலிருக்கும் வரை எந்த நேரத்திலும் ஆட்சி மாறலாம்

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

பணமோசடிகள் இடம்பெறும் நாடுகளுக்கான சாம்பல் நிற பட்டியலில் இருக்கும் இலங்கை விரைவில் கறுப்புப் பட்டியலுக்குச் செல்லும் ஆபத்து இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்தார்.

அரசாங்கம் முன்வைத்திருக்கும் இறுதி வரவு செலவுத் திட்டம் இதுவென்றும், தாம் எதிர்க்கட்சியில் இருக்கும் வரை எந்தநேரத்திலும் புதிய அரசாங்கம் உருவாகலாம் என்றும் அவர் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்த அரசாங்கத்தின் இறுதி வரவு செலவுத் திட்டம் இதுவாகும். நாம் எதிர்க்கட்சியில் இருக்கும்போது எந்தநேரத்திலும் உங்கள் கதிரைகள் மாற்றமடையும் என்பதை கவனத்தில் கொள்ளவும். கடந்த வரவு செலவுத் திட்டத்தில் மாளிகை வரியென ஒன்றை அறிமுகப்படுத்தினர். இருக்கும் இடத்திலிருந்து எடுத்து இல்லாதவர்களுக்குக் கொடுக்கின்றோம் என்றனர். இறுதியில் இருப்பவர்களிடமும், இல்லாதவர்களிடமிருந்தும் எடுத்து வருகின்றனர். அரசாங்கத்துக்கு தற்பொழுது சம்பளம் கொடுக்க மாத்திரமன்றி போனஸ் கொடுப்பதற்குப் பணம் இல்லாத நிலையே காணப்படுகிறது.

அரசாங்க நிறுவனங்கள் நஷ்டம் அடையும் நிலைக்குச் சென்றுள்ளன. இவற்றுக்கான பொறுப்பை யார் பொறுப்பேற்பது?.

கிராமங்களை கட்டியெழுப்பும் கம்பெரலிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்தனர். தற்பொழுது சகல கிராமங்களும் இருட்டில் இருக்கின்றன. கிராமங்களுக்கு நீர் கிடைப்பதில்லை. எந்த நேரத்தில் நீர் துண்டிக்கப்படுகின்றது என்பது தெரியாமல் உள்ளது. மின்சாரத்தைத் துண்டிக்கும்போது முன் அறிவிப்பு வழங்கிவிட்டு வெட்டவேண்டும். அறிவிப்பு இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் வியாபாரிகள் உள்ளிட்ட தொழில்துறையினர் பலர் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டியுள்ளனர். பிரதமரின் பிறந்த நாளன்று இந்த அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டுவதால் நாட்டு மக்களுக்குப் பயன் ஏற்படாது. சரியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். மக்களை ஏமாற்றும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

என்டர்பிரைஸ் சிறிலங்கா திட்டத்தின் ஊடாக 60 பில்லியன் ரூபாய்களைக் கடன்களாக வழங்குவதாகக் கூறினீர்கள். எனினும், கடந்த வருடத்தில் வங்கிகளின் ஊடாக 750 பில்லியன் ரூபா வாடிக்கையாளர்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் 60 பில்லியன் ரூபா கடன் எந்தளவுக்குப் போதுமானதாகவிருக்கும் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

 

Sat, 04/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை