வடக்கில் பாடசாலைகளின் நுழைவாயில் கதவுகளை மூட அறிவுறுத்தல்

வட மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பமாகி முடியும்வரை பாடசாலை வளாகங்களுக்கான அனைத்து நுழைவாயில் கதவுகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, வெளியாட்கள் எவரும் பாடசாலை வளாகத்தினுள்  அனுமதிக்கப்படக்  கூடாது எனவும்,  வட மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கின் சகல கல்விப் பணிப்பாளர்களுக்கும் அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

அனைத்து அரசாங்க பாடசாலைகளும் முதலாம் தவணை முடிவடைந்து இரண்டாம் தவணைக்காக கடந்த திங்கட்கிழமை (22) திறக்கப்படவிருந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களால் 22ஆம் 23ஆம் திகதி சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

தற்போது நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்ததோடு, எதிர்வரும் 29 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

இதேவேளை நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய முஸ்லிம் பாடசாலைகள், முதலாம் தவணை முடிவடைந்து இரண்டாம் தவணைக்காக இம்மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமானதோடு, கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பணிப்புரைக்கமைய  17, 18 ஆம் திகதிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது.

இதற்கமைய  பாடசாலைகளினதும், மாணவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவு மற்றும் விடுகை தொடர்பாக அதிபர் கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு, பாடசாலை வளாகத்தின் வெளிப் பாதுகாப்பு தொடர்பாகவும்  கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வடமாகாணப் பிரதம செயலாளரின் தலைமையில் அவரது அலுவலகத்தில் இன்று (25) கூட்டமொன்று இடம்பெற்றதோடு, இதில் வடமாகாண ஆளுநரின் செயலாளர்,  கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் 12வலயக்  கல்விப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

(மயூரப்பிரியன் -யாழ்.விசேட நிருபர்)

Thu, 04/25/2019 - 12:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை