காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளால் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தொடர் போராட்டம் நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்றைய தினம் (07) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இக் கவனயீர்ப்பு போராட்டமானது நேற்றுக் காலை 10மணியிலிருந்து நண்பகல் 12மணி வரை முல்லைத்தீவு வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாம் முன்பாக இடம்பெற்றது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது வட்டுவாகல் பாலத்துக்கு அண்மையாக வைத்து பல நூற்றுக்கணக்கானவர்கள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும் சரணடைந்துமிருந்தனர். இந்  நிலையில் இன்று வரை அவர்கள் எங்கே என்று பதில் ஏதும் இல்லை.

எனவே இந்த சம்பவத்தின் சாடசியாக உள்ள வட்டுவாகல் பாலத்தில் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டமும் வட்டுவாகல் சம்பத்தகன்னிமார் ஆலயத்தில் பிரார்த்தனை வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலிலிருந்து பேரணியாக வட்டுவாகல் பாலத்தை நோக்கி பதாதைகளை தாங்கியவாறு வருகைதந்து வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர் .

இப் போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டிருந்தார். இதேநேரம் போராட்டம் காரணமாக பல பொலிஸார் கடற்படை முகாம் முன்பாக பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

(ரி.விரூஷன்)

Mon, 04/08/2019 - 12:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை