பெரும்பாலான பகுதிகளில் மழை எதிர்பார்ப்பு

RSM
பெரும்பாலான பகுதிகளில் மழை எதிர்பார்ப்பு-Weather Forecast-Expecting Rain After 2pm

- கொழும்பில் 23.5 மி.மீ. அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
- வவுனியாவில் 37.9oC; நுவரெலியாவில் 8.8oC
- மத்திய, சப்ரகமுவ, ஊவா, வவுனியா, மன்னாரில் பிற்பகலில் மழை

நாளை (16) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்று முற்பகல் 8.30 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தின் கோட்டை பகுதியில் நாட்டின அதிகூடிய மழைவீழ்ச்சியாக 23.5 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியாவில் ஆகக் கூடுதலா 37.9 பாகை வெப்பநிலை பதிவாகியுள்ளதோடு, ஆகக் குறைவாக நுவரெலியாவில் 8.8 பாகை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, மற்றும் மாகாணங்களிலும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் நாளை பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இப்பிரதேசங்களில் பலத்த மின்னல் தாக்கத்திற்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

இதேவேளை, எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

காங்கேசந்துறையிலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Mon, 04/15/2019 - 14:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை