மிரிஜ்ஜவிலயில் மேலும் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம்

மிரிஜ்ஜவில ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில் மற்றுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. சுஜி இன்டர்நஷனல் நிறுவனம் இதற்கான முதலீட்டை மேற்கொள்வதாக அபிவிருத்தி திறைமுறைகள், சர்வதேச வர்த்தக பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை ஜீரணிக்க முடியாத எதிர்க்கட்சியினர் பொறாமை காரணமாகவே பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

மிரிஜ்ஜவிலவில் இந்திய நிறுவனத்தினால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கான முதலீடு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த சுஜி இன்டர்நஷனல் நிறுவனம் மற்றுமொரு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க முன்வந்துள்ளது. இது தொடர்பில் நாளை (இன்று) புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு மற்றும் அபிவிருத்தி திறைமுறைகள், சர்வதேச வர்த்தக அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதியமைச்சர் நளின் பண்டார இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்தப் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு 17 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது. இந்த முதலீடானது 20 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. 600 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

குறுகிய காலத்தில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். எதிர்க்கட்சியினர் முன்வைத்த விமர்சனங்களை ஏற்றுக் கொள்கின்றோம். 1978ஆம் ஆண்டிலிருந்து 17.4 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் கடந்த 3 வருடங்களில் மாத்திரம் 5.58 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி முதலீடுகளை எம்மால் நாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தினால் மாத்திரம் முதலீடுகள் வரவில்லை. அதனைவிட 1500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஞானமுத்து ஸ்ரீநேசன்

(த.தே.கூ)

யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் எந்தவொரு தொழிற்சாலைகளும் அமைக்கப்படவில்லை. அந்தப் பகுதிகளிலிருந்து தொழிலாளர்களை தூரப் பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்கின்றனரே தவிர தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படவில்லை. 1.6 வீதமான தொழிலாளர்களே வடக்கு, கிழக்கில் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுள்ளனர். கடந்த பத்து வருடங்களாக இந்தப் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மாற்றான்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தப்படுகின்றனர். 2016ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் வடக்கு, கிழக்கில் மூன்று தொழிற்சாலைகள் அமைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரை எந்தவொரு தொழிற்சாலையும் அமைக்கப்படவில்லை. அரசாங்கம் எஞ்சியிருக்கும் ஒன்றரை வருடங்களிலாவது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் மத்தியில் உளயவியல் ரீதியில் ஏற்படும் தாக்கங்கள் பின்னர் போராட்டங்களுக்கு வழிகோலிவிடும். போராட்டத்துக்கான புரட்சிகள் காணப்பட்டாலும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்.

எஸ்.எம்.மரிக்கார்

(ஐ.தே.க)

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கைக்கு மீன்வளம் மிகவும் முக்கியமானது. எனினும், கடந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் சண்டித்தனம் காண்பிக்கப் போய் ஐரோப்பிய ஒன்றியம் மீன்களைக் கொள்வனவு செய்யத் தடை செய்தன. அது மாத்திரமன்ற ஆடைத்துறைக்கான ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையையும் இழக்கவேண்டி ஏற்பட்டது. இருந்தபோதம் அரசாங்கம் இந்த நிலைமைகளை மாற்றியமைத்துள்ளது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்றுமதித்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வியட்னாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது இலங்கை பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது.

ஈ.சரவணபவன்

(த.தே.கூ)

இலங்கையில் இந்துப்பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதுடன் இந்து பீடங்கள் உருவாக்கப்பட்டு இந்து சமய ஆராய்ச்சிகள் இடம்பெற வேண்டும். வடக்கில் மட்டுமன்றி நாடு முழுவதும் இந்துக் கோவில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், அழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. வடக்கு முதல் தெற்கு வரை இந்துக்கோவில்கள், இந்து அமைப்புக்கள், இந்து மக்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையுள்ளது. நல்லாட்சியில் நல்லது நடக்குமென நம்பிய இந்து மக்கள் கடந்த ஆட்சி போன்றதே இந்த ஆட்சியுமெனக்கண்டு வேதனையடைந்துள்ளனர். காங்கேசன்துறையில் இந்துக்களின் புனித பூமியான நகுலேஸ்வரத்தில் 106 ஏக்கர் காணியை சுவீகரித்து தனியாருக்கு வழங்கும் சதி நடக்கின்றது. சிங்களவருக்கு தலதாமாளிகை எவ்வளவு புனிதமோ, முக்கியமோ அதேயளவுக்கு இந்துக்களுக்கு கீரிமலை புனித பூமியும் முக்கியமானது.

இதேவேளை நாட்டில் பௌத்த பல்கலைக்கழகங்கள் இருப்பதுபோல் இந்துப் பல்கலைக்கழகம் அமைக்கப்படவேண்டும்.அத்துடன் இந்து பீடங்களும் உருவாக்கப்பட்டு இந்து சமய ஆராய்ச்சிகள் இடம்பெறவேண்டும். இந்து சமய ஆராச்சிகள், இந்து தத்துவவியை போன்றவற்றை இந்திய பல்கலைக்கழகங்களுக்கு சென்று கற்க புலைமைப் பரிசில் வழங்கப்படவேண்டும். பௌத்தர்கள், முஸ்லிம்கள் யாத்திரை செல்வது போல் இந்துக்களும் இந்தியாவின் சிதம்பரத்துக்கு யாத்திரை செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அது மட்டுமன்றி தெஹிவளை,வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி பகுதிகளில் இந்துக்கள் செறிந்து வாழ்வதனால் வெள்ளவத்தை கடற்கரையில் அதிகை கிரியைகள் செய்யக்கூடிய மேடம் அமைக்கப்பட வேண்டும்.

அமைச்சர் கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே தொழிற்துறைகள் ஆரம்பிக்கப்பட்டன. எம்மால் ஆரம்பிக்கப்பட்ட தொழில்துறைகளை விமர்சித்தவர்கள் தற்பொழுது அதனை முழுமையாகப் பயன்படுத்துகின்றனர். 2018 ஆண்டில் மாத்திரம் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்டுவர முடிந்துள்ளதுடன் அது மாத்திரமன்றி அனுமதிபெற்ற 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான முதலீடுகளும் உள்ளன. 2019ஆம் ஆண்டில் இதுவரை 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஏற்றுமதி வலயங்கள் பல அமைக்கப்பட்டு ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வேலு குமார் (ஐ.தே.க)

இந்து ஆலயங்களில் அதிகமான நிர்வாகக் குறைபாடுகள், மோசடிகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் சட்ட வரம்புகள் கிடையாது. பெயரளவிலே விசாரணைகள் நடத்தப்பட்டு அவை மூடிமறைக்கப்படுகின்றன. ஆலய பரிபாலம் தொடர்பில் உரிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இரண்டாம் மொழியை கற்பதற்கு பாடசாலைகளில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நாட்டில் சீன மொழிப் பெயர்ப்பலகைள் உருவாகி வருகின்றன. மொழிகளுக்கிடையிலான மோதல்கள் தீர்க்கப்பட வேண்டும்.

Wed, 04/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை