வன்டேஜ் எப்.ஏ கிண்ண உதைபந்தாட்ட தொடரில் 827 அணிகள் பங்கேற்பு

இலங்கையின் மிகவும் பழைமை வாய்ந்த கால்பந்து தொடரான எப்.ஏ கிண்ணத்தின் 2019ஆம் ஆண்டுக்கான தொடர், முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவனமான எபோனி ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்தின் வன்டேஜின் பூரண அனுசரணையுடன் கடந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பமானது.

கடந்த 1948ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பமான எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரின் 57ஆவது அத்தியாயமாகவே இந்த வருடத்திற்கான தொடர் இந்த வார இறுதியில் ஆரம்பமாகவுள்ளது.

இம்முறையும் முழுமையாக நொக் அவுட் முறையில் இடம்பெறும் வன்டேஜ் எப்.ஏ கிண்ண தொடரின் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வு இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் கடந்த 28ஆம் திகதி இடம்பெற்றது.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா, பொதுச் செயலாளர் ஜஸ்வர் உமர், எபோனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரம்சி ரஹீம், அந்நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மொஹமட் முஸ்பிர், கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகள், வன்டேஜ் நிறுவன அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இம்முறை தொடரில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள 63 கால்பந்து லீக்களில் இருந்து மொத்தமாக 827 அணிகள் பங்கு கொள்ளவுள்ளன. அதேபோன்று, இம்முறை போட்டிகள் ஆரம்ப கட்டம், மாவட்ட ரீதியிலான போட்டிகள் மற்றும் தேசிய மட்டத்திலான போட்டிகள் ஆகிய 3 கட்டங்களாக இடம்பெறவுள்ளன.

ஆரம்ப கட்டப் போட்டிகள் லீக் மட்டத்திலான மோதல்களாக இடம்பெறும். பின்னர் லீக் சம்பியன்களாக தெரிவாகும் 6-4 அணிகளும், மாவட்ட ரீதியிலான போட்டிகளில் விளையாடும். அதன் பின்னர் இடம்பெறும் 32 அணிகள் சுற்றானது தேசிய மட்டத்திலான ஆட்டமாக இருக்கும்.

கடந்த முறை எப். ஏ கிண்ணப் போட்டிகளில் 32 அணிகள் சுற்றுக்கு தெரிவாகிய அணிகள் அனைத்தும் இம்முறை தொடரில் தேசிய மட்டத்திலான போட்டிகளில் இருந்து தமது எப்.ஏ கிண்ணத்தை ஆரம்பிக்கின்றன. அதன்படி, குறித்த 32 அணிகளும், மாவட்ட மட்டப் போட்டிகளில் வெற்றி கொள்ளும் அணிகளுடன் தேசிய மட்டத்திலான மோதலில் இணைந்துகொள்ளும்.

எவ்வாறிருப்பினும், இரண்டாம் கட்டப் போட்டிகளில் இருந்து அரையிறுதிப் போட்டிகள் வரையிலான அனைத்து சுற்றுகளுக்கும் முன்னர் குலுக்கல் முறையிலேயே மோதும் அணிகள் தெரிவு செய்யப்படும்.

மாவட்ட ரீதியிலான அணிகளை பலப்படுத்தும் நோக்கில், லீக் சம்பியனாக தெரிவாகும் அணி, குறித்த லீக்கின் ஏனைய அணிகளில் உள்ள சிறந்த 5 வீரர்களை தமது அணிக்கு இணைத்து மாவட்ட ரீதியிலான போட்டிகளில் பங்கு கொள்ள முடியும்.

அதேபோன்று, மார்ச் 30ஆம் திகதி ஆரம்பமான இந்த தொடரின் ஆரம்ப கட்டப் போட்டிகள் ஏப்ரல் மாத முடிவில் நிறைவடையும் என்றும், அடுத்த 3 வாரங்களில் அடுத்த கட்டப் போட்டிகள் இடம்பெறும் அதேவேளை, ஆகஸ்ட் இறுதியில் தொடரை நிறைவுசெய்ய உத்தேசித்துள்ளதாகவும் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா தெரிவித்தார்.

இம்முறை தொடரில் சம்பியனாகும் அணிக்கு 750,000 ரூபாய் பணப்பரிசும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 500,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை