769 கிலோ கொக்கைன் ஜனாதிபதி முன்னிலையில் அழிப்பு

RSM
769 கிலோ கொக்கைன் ஜனாதிபதி முன்னிலையில் அழிப்பு-769kg Cocaine Destroyed-Maguruwila Kelaniya

சுற்றிவளைப்புகள் ஏப்ரல் 03 முதல் மேலும் தீவிரம்

சுமார் 769 கிலோ கிராமிற்கும் அதிகமான சட்டவிரோத கொக்கைன் போதைப்பொருள் களனி, மகுறுவெலவில் அமைந்துள்ள சுரவீர களஞ்சிய வளாகத்தில் வைத்து அழிக்கப்பட்டது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள குறித்த கொக்கைன் போதைப்பொருளே இவ்வாறு அழிக்கப்பட்டது.

குறித்த கொக்கேன் போதைப்பொருள், மூடப்பட்ட தொகுதியினுள் இரசாயனங்களின் மூலம் கரைக்கப்பட்டு, பெறப்படும் விளைவை புத்தளம் சீமெந்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படவுள்ளது.

769 கிலோ கொக்கைன் ஜனாதிபதி முன்னிலையில் அழிப்பு-769kg Cocaine Destroyed-Maguruwila Kelaniya

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய இன்று (01) மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கையை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி அங்கு விஜயம் செய்திருந்தார்.

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் தலைமையில் சர்வதேச விதிமுறைகளுக்கமைவாக போதைப் பொருட்கள் அழித்தொழிக்கப்பட்டது.

பொலிஸாரினால் கைப்பற்றப்படும் போதைப் பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் பொதுமக்கள் இடையே தோற்று வித்திருக்கும் சர்ச்சைகளுக்கு தீர்வளிக்கும் முகமாக ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. 

கடந்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதி 926 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருள் பகிரங்கமாக அழித்தொழிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல் மூலமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்களே அவ்வாறு அழிக்கப்பட்டது.

இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பகிரங்கமாக அழித்தொழிப்பதற்கான நடவடிக்கையின் அடிப்படையில் இன்று (01) குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏப்ரல் 03 ஆம் திகதிக்கு பின்னர் சட்டவிரோத போதைப்பொருட்கள் தொடர்பான சுற்றிவளைப்புகளை மேலும் தீவிரப்படுத்துவதுடன், போதைப் பொருட்களை இலங்கையிலிருந்து முற்று முழுதாக இல்லாதொழிக்கும் வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுத்து செல்வதற்கு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Mon, 04/01/2019 - 14:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை