மட்டக்களப்பிலிருந்து 600கி.மீ. தூரத்தில் சூறாவளி மையம்

மேலும் தீவிரமடைகிறது பானி

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்கே மட்டக்களப்பிலிருந்து 600 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ள பானி சூறாவளி இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் தீவிரம் அடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. நேற்று இரவு தீவிரமடையும் இந்த சூறாவளி 24 நான்கு மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து நகரத்தொடங்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த சூறாவளியானது மே மாதம் முதலாம் திகதிவரை கிழக்கு கரையை நோக்கி வடக்குத் திசையினால் முன்னோக்கி நகரும் என்றும் அதன் பின்னர் வடகிழக்குப் பகுதியை நோக்கிச் செல்லும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் சில நாட்களுக்கு நாடு முழுவதிலும் முகில்கூட்டம் காணப்படுவதுடன், கடுமையான காற்று மற்றும் அவ்வப்போது கடும்மழை வீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றராகக் காணப்படும். குறிப்பாக மத்திய மலைநாட்டுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் கடுமையான காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய, தென், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதுடன் சில இடங்களில் மணித்தியாலத்துக்கு 150 மில்லிமீற்றர் கனமழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய இடங்களில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள், கடற்படையினர் மற்றும் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்புக் குறித்து கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Tue, 04/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை