நொட்ர–டாம் தேவாலயத்தை 5 ஆண்டுகளில் கட்டியெழுப்ப ஜனாதிபதி மக்ரோன் உறுதி

தீயில் சேதமடைந்த பாரிஸ் நகரில் உள்ள நொட்ர–டாம் தேவாலயத்தை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டி எழுப்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் உறுதி அளித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த அழிவு குறித்து கடந்த செவ்வாயன்று குறுகிய நேரம் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய மக்ரோன், “இருந்ததை விட அழகாக நொட்ர–டாம் தேவாலயத்தை நாம் மீள கட்டியெழுப்புவோம். அதனை ஐந்து ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்ய விரும்புகிறேன். எம்மால் முடியும்” என்றார்.

எனினும், 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ட்ராஸ்பர்க் தேவாலயத்தை புனரமைக்கும் அமைப்பின் தலைவர் எரிக் பிஷ்சர், நொட்ரே–டாம்் தேவாலயத்தை புனரமைக்க பல தசாப்தங்கள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுர் நேரப்படி, கடந்த திங்களன்று மாலை 06:43 மணிக்கு பரவிய, இந்தத் தீ விபத்தினால், இந்த தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டுச் சுவர்கள் ஆகியன கடுமையாகச் சேதமடைந்து இடிந்து விழுந்தன.

இரண்டு மிகப்பெரிய மணிக்கூண்டுகளைக் கொண்ட கோபுரங்கள் உள்ளிட்ட தேவாலயத்தின் முக்கியப் பகுதிகள் தீ விபத்தில் இருந்து தப்பின. இந்தத் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர சுமார் 15 மணிநேரம் ஆனது. இதில் சுமார் 400 தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர்.

ஐ.நாவின் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான இந்த பிரெஞ்சு தேவாலயத்தை புனரமைக்க சர்வதேச அளவில் நிதி கோரும் முயற்சியைத் தொடர்ந்து 800 மில்லியன் யூரோ அளவுக்கு நிதி வழங்க பல நிறுவனங்களும் தொழில் அதிபர்களும் உறுதியளித்துள்ளனர்.

தேவாலயத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து தனியார் நிறுவனங்களின் ஊழியர்களிடம் தீ விபத்து உண்டானதற்கான காரணத்தை அறியும் நோக்கில் விசாரணை நடத்தி வருகின்றனர். யாரும் வேண்டுமென்றே தீ வைக்கவில்லை என்பதுபோல தெரிகிறது என்று விசாரணை அதிகாரி ரெமி ஹெய்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

தேவாலயத்தில் இருந்து மீட்கப்பட்ட கலைப் பொருட்களும், வழிபாட்டுப் பொருட்களும் லுௗவ்ர் அருங்காட்சியக்கத்தில் வைக்கப்படும். அவற்றில் சேதமடைந்தவை மீண்டும் புனரமைக்கப்படும் என பிரான்ஸ் கலாசார அமைச்சர் பிராங்க் ரெய்ஸ்ட்டர் கூறியுள்ளார்.

சிலுவையில் ஏற்றப்படும் முன் ஏசு கிறிஸ்து அணிந்திருந்ததாக நம்பப்படும் முள் கீரிடம், சிலுவையின் ஒரு பகுதி, ஓர் ஆணி, மன்னர் ஒன்பதாம் லுௗயிஸ் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஆடை ஆகியவை அந்தப் பொருட்களில் அடக்கம்.

Thu, 04/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை