5ஆவது தவணைக்கு இஸ்ரேல் பிரதமராக நெதன்யாகு வெற்றி

இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தலின் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் புதிய வலதுசாரி கூட்டணி ஒன்று ஏற்பட வாய்ப்பு உருவாகி உள்ளது. இதன்மூலம் பென்ஜமின் நெதன்யாகு ஐந்தாவது தணைக்கு பிரதமராக தெரிவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நெதன்யாகுவின் லிகுட் கட்சி மற்றும் அவருக்கு கடும் போட்டியாக இருந்த முன்னாள் இராணுவத் தளபதி பென்னி கான்ட்சின் மைய நீல மற்றும் வெள்ளை கூட்டணி ஒரே எண்ணிக்கையான ஆசனங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் லிகுட் மற்றும் வலதுசாரி கூட்டணி 120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் 65 ஆசனங்களுடன் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

69 வயதான நெதன்யாகு பெரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த தேர்தல் முடிவின் மூலம் இஸ்ரேலின் நிறுவனரான டேவிட் பென்கூரியனை விஞ்சி, இஸ்ரேலில் நீண்ட காலம் பதவியில் இருந்த பிரதமராக இந்த ஆண்டு கடைசியில் பதிவாவதற்கு நெதன்யாகுவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி எந்த வெற்றியாளரும் இன்றி கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் நெதன்யாகு மற்றும் கான்ட்ஸ் செவ்வாய்க்கிழமை இரவு பரஸ்பரம் வெற்றி அறிவிப்பை வெளியிட்டனர்.

“இது ஒரு வலதுசாரி அரசாங்கமாக இருக்கும், ஆனால் நான் அனைவரதும் பிரதமராக இருப்பேன்” என்று தனது ஆதரவாளர்களின் கரகோசத்திற்கு மத்தியில் நெதன்யாகு குறிப்பிட்டார்.

“முந்திய தேர்தல்களை விடவும், ஐந்தாவது தடவையாகவும் என் மீது நம்பிக்கை வைத்து இஸ்ரேல் மக்கள் வாக்களித்தது அதிக உணர்வுபூர்வமாக உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலை விடவும் லிகுட் கட்சி ஐந்து மேலதிக ஆசனங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

120 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறுவதில்லை என்பதோடு கூட்டணி ஆட்சிகளே இதுவரை ஆட்சி புரிந்துள்ளன.

தேர்தலை முன்னிட்டு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நெதன்யாகு முன்னெடுத்தது தேர்தலில் அவருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது. தேர்தல் நெருங்கிய நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் யூத குடியேற்றங்களை இஸ்ரேலுடன் இணைப்பதாக அவரது அறிவிப்பு அதிக தாக்கம் செலுத்துவதாக இருந்தது.

இந்த குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்திற்கு விரோதமானது என்றபோதும் இஸ்ரேல் அதனைத் தொடர்ந்து மீறி வருகிறது.

தேர்தல் முடிவுகளின்படி இஸ்ரேலின் கொள்கைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படாது என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். நெதன்யாகுவின் சென்ற அரசு இஸ்ரேல் வரலாற்றில் அதிக வலதுசாரி அரசாக இருந்தது. அந்த கொள்கைகள் தொடர வாய்ப்பு உள்ளது.

இஸ்ரேல் தேர்தல் அமைதியை கொண்டுவர உதவும் என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹமூத் அப்பாஸ் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் அதற்கு மாறாக இருப்பதாக பலஸ்தீன மூத்த அதிகாரி ஹனான் அஷ்ராவி நேற்று குறிப்பிட்டார்.

“அவர்கள் பாராளுமன்றத்தில் தம்மை பிரதிநிதித்துவப்படுத்த பெரும்பான்மையாக வலதுசாரிகள், அந்நியர் மீதான வெறியர்கள், பலஸ்தீனர் எதிர்ப்பாளர்களை தேர்வு செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

காசா பகுதியில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான பதற்றம் அண்மைய வாரங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அமைதி வேண்டாம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு வழங்கி தற்போதைய நிலைமையை பாதுகாப்பதற்காகவே இஸ்ரேலியர் வாக்களித்திருப்பதை ஆரம்பக்கட்ட முடிவுகள் காட்டுகின்றன. உண்மை என்னவென்றால் தேர்வு செய்யப்பட்ட 120 உறுப்பினர்களில் 14 உறுப்பினர்கள் மாத்திரமே 1967 இன் கீழ் இரு நாட்டு தீர்வுக்கு ஆதரவாக உள்ளனர்” என்று பலஸ்தீன விடுதலை அமைப்பின் செயலாளர் நாயகம் சயெப் எரகத் டிவிட்டர் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் இடதுசாரி, அரபு இஸ்ரேலிய கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

1990களில் பலஸ்தீனத்துடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்ட இஸ்ரேல் அரசியலில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தத் தேர்தலில் வெறும் ஆறு ஆசனங்களை வென்று தனது மோசமான பெறுபேறை பெற்றுள்ளது.

Thu, 04/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக