5ஆவது தவணைக்கு போட்டியிடும் நெதன்யாகுவுக்கு கடும் சவால்

இஸ்ரேலில் கடும் போட்டி நிலவும் பாராளுமன்ற தேர்தலின் வாக்களிப்பு நேற்று இடம்பெற்றது.

வலதுசாரி லிகுட் கட்சிக்கு தலைமை வகிக்கும் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, ஐந்தாவது தவணைக்காக போட்டியிடுகிறார். எனினும் அவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்திருப்பதோடு ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் பென்னி கான்ட் அவருக்கு கடும் சவாலாக மாறியுள்ளார்.

மையவாத நீலம் மற்றும் வெள்ளை கூட்டணியைச் சேர்ந்த கான்ட்ஸ், பாதுகாப்பு மற்றும் ஊழல் அற்ற அரசியல் ஆகிய முக்கிய விடயங்களில் நெதன்யாகுவுக்கு சவாலாக உள்ளார்.

120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை வென்றதில்லை என்பதால், இன்று வெளியாகும் தேர்தல் முடிவுடன் கூட்டணி அரசொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்படும்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பேரணியில் லிகுட் கட்சி ஆதரவாளர்களிடம் உரையாற்றிய நெதன்யாகு, பதற்றமின்றி, வாக்குச்சாவடிகளுக்கு செல்லும்படி வாக்காளர்களை வலியுறுத்தினார்.

இடதுசாரி போட்டியாளர்கள் வெல்லும் வாய்ப்பு தொடர்ந்து இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் இஸ்ரேலிய குடியேற்றங்களை இஸ்ரேலுடன் இணைப்பது போன்ற கடுமையான அறிவிப்புகளை வெளியிட்டு கடைசி கட்டத்தில் தனது வலதுசாரி வாக்குகளை வெல்ல நெதன்யாகு முயற்சிப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச சட்டத்தில் குடியேற்றங்கள் சட்டவிரோதம் என்றபோதும் இஸ்ரேல் தொடர்ந்து அதனை மீறி வருகிறது.

எனினும் தம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் காசாவில் பலஸ்தீன போராளிகளுடனான மோதல் அதிகரித்திருக்கும் சூழலில் நெதன்யாகு இந்தத் தேர்தலில் கடும் சவாலை சந்தித்துள்ளார்.

தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறுக்கும் நெதன்யாகு தேர்தலில் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கும் சூனியக்காரர்களுக்கு இலக்காகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நீலம் மற்றும் வெள்ளை கூட்டணி ஆதரவாளர்கள் முன் டெல் அவிவில் உரையாற்றிய கான்ட்ஸ், வழக்கு விசாரணையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர பிரதமர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

“அவர் முகம்கொடுக்கும் தீவிர சவால்களுக்கு முன்னால் சட்ட பாதுகாப்பை பெறும் சட்ட அரண் ஒன்றை உருவாக்குவதே முழுமையான நோக்கமாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.

இரு போட்டியாளர்களும் கடும் போட்டியை எதிர்கொண்டிருப்பதாகவும் இரு தரப்பும் தலா 30 ஆசனங்களை வெல்லும் என்றும் தேர்தலுக்கு முந்திய கணிப்புகள் காட்டுகின்றன.

எனினும் துண்டு துண்டுகளாக உடைந்திருக்கும் இஸ்ரேலிய அரசியல் கட்சி அமைப்பில் நெதன்யாகுவால் புதிய கூட்டணி அரசொன்றை அமைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

Wed, 04/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை