ஒலுவில் அஷ்ரப் நகரில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த 59 ஏக்கர் காணி கையளிப்பு

ஒலுவில் அஷ்ரப் நகரில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த 59 ஏக்கர் காணி, ஒரு சில தினங்களுக்குள் பொது மக்களிடம் கையளிக்கப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்டடத் தொகுதி திறப்பு விழா வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார்.  

ஆளுநர் தொடர்ந்தும் உரையாற்றும் போது தெரிவித்ததாவது, ஒலுவில் முதலாம் பிரிவு அஷ்ரப் நகரில் மேட்டு நில சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்த ஏழை விவசாயிகளின் 59ஏக்கர் காணியை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.  

இதனால் அந்த மக்கள் இருப்பதற்கு இடமில்லாமல் பல்வேறு கஷ்டங்களுக்குள்ளாகி வந்தனர்.

இவ்விடயம் சம்பந்தமாக ஜனாதிபதியிடம் எடுத்துரைத்ததையடுத்து 59ஏக்கரையும் பொதுமக்களிடம் ஒப்படைப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இக்காணி ஒரு சில தினங்களுக்குள் பொது மக்களிடம் ஒப்படைப்பதற்கு அதிகாரிகளை பணித்துள்ளேன்.  

மேலும் ஒலுவில் துறைமுகம் எந்த வித செயற்பாடுகளும் இல்லாமல் கைவிடப்பட்ட நிலையிலுள்ளது. இதனை உருப்படியாக செயற்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று பொது மக்களுக்கு சேவை செய்வதற்கு ஆளுநர் பதவியை ஒரு வருடத்திற்கு ஜனாதிபதியிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டுள்ளேன் என்றார். 

(ஒலுவில் நிருபர்) 

Sat, 04/20/2019 - 09:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை