39 நாடுகளுக்கான on arrival visa தற்காலிகமாக இடைநிறுத்தம்

SUG

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு 39 நாடுகளுக்கான வருகை தரு வீசா (on arrival visa) வழங்கும் நடைமுறையை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

இம்மாத முற்பகுதியில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய  எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து, 39 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு வருகை தரு வீசா  இலங்கையில் வழங்கப்படவிருந்தது.

எனினும், இலங்கையின் சில இடங்களில் கடந்த உயிர்த்த ஞாயிறன்று (21) இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்தும், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டும் மறு அறிவித்தல்வரை இந்த நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

39 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு வருகை தரு வீசா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தோடு,  தற்போதைய நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு அவ்வீசா வழங்கும் நடைமுறையை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாகவும்,  சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

இலங்கை சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் ஆஸ்திரியா, பல்கேரியா, கம்போடியா, குரோசியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸிடொனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், கிறிஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லித்வியா, லித்துவேனியா, லக்ஸம்பேர்க், மோல்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ரோமானியா, சிலோவேனியா, சுவீடன், ஸ்பானியா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, தென்கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூஸிலாந்து, மலேசியா, தாய்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு வருகை தரு வீசா வழங்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 04/26/2019 - 09:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை