சவூதியில் 37 கைதிகள் மீது மரண தண்டனை நிறைவேற்றம்

பயங்கரவாத குற்றச்சாட்டு:

சவூதி அரேபியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளான 37 கைதிகள் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு குற்றவாளி சிலுவையில் அறையப்பட்டுள்ளார்.

“பயங்கரவாத சிந்தனைகளை பெற்று பங்கரவாத குழு ஒன்றை ஏற்படுத்தி” சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக இவர்கள் குற்றங்காணப்பட்டதாக உள்துறை அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஒருவர் தனது 16 வயதில் கைது செய்யப்பட்டவர் என்று சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

சவூதியில் தலை துண்டித்தே மரண தண்டனை நிறைவேற்றப்படுவது வழக்கமாகும். எனினும் அதனைவிட மோசமான குற்றச்செயல்களுக்கு மரண தண்டனைக்கு பின் சிலுவையில் அறையப்படுகிறது.

பாதுகாப்பு தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தி பலரையும் கொன்றதாக குற்றங்காணப்பட்டவர்கள் மீதே கடந்த செவ்வாய்கிழமை இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவூதி தலைநகர் ரியாத், மக்கா மற்றும் மதீனா உட்பட பல இடங்களில் இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எனினும் இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் குறைந்தது 14 பேர் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என்று மன்னிப்புச் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண் ஒருவரை கத்தியால் குத்திக் கொன்ற ஒருவர் மீது 2018 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். ஒருவரை கொலை செய்ய முயன்றது மற்றும் பெண் ஒருவரை கற்பழிக்க முயன்றதாகவும் அவர் மீது குற்றங்காணப்பட்டிருந்தது.

2016 ஜனவரி மாதம் 47 பேர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின் அதிக எண்ணிக்கையானோர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பதாக இது உள்ளது.

 

Thu, 04/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை