இஸ்ரேலின் காசா எல்லையில் ஆர்ப்பாட்டம்: 3 பலஸ்தீனர் பலி

தமது பூர்வீக பூமிக்கு திரும்பும் உரிமையை கோரும் பேரணியின் ஓர் ஆண்டு பூர்த்தியை ஒட்டி இஸ்ரேலுடனான காசா எல்லையில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் ஒன்றுதிரண்டிருப்பதோடு இஸ்ரேல் தனது துருப்புகள் மற்றும் டாங்கிகளை எல்லையில் குவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு, ரப்பர் குண்டு தாக்குதல் மற்றும் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டதில் 17 வயது கொண்ட மூன்று பலஸ்தீன சிறுவர்கள் கொல்லப்பட்டு குறைந்தது 207 பேர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு காசாவின் கிழக்கு கான் யூனிஸ் நகரில் நெஞ்சுப் புகுதியில் துப்பாக்கி குண்டு பாய்்ந்த டமர் அபி அல் கெயிர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இரண்டாவது சிறுவனான ஆதம் ஆம்ரா முகத்தில் குண்டடிபட்டு உயிரிழந்தான்.

பிலால் அல் நஜ்ஜார் என்ற சிறுவனும் இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக காசா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் பிரதான ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர் இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் நான்காவது பலஸ்தீனராக முஹமது ஜிஹாத் சாத் என்ற 20 வயது இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.

1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது இடம்பெற்ற வன்முறைகளில் வெளியேற்றப்பட்ட தமது குடும்பத்தினரின் பூர்வீக நிலத்திற்கு திரும்பும் உரிமையை கோரியே பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். காசா மீது கடந்த 12 ஆண்டுகளாக இஸ்ரேல் மற்றும் எகிப்து மேற்கொண்டு வரும் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர்.

“நாம் கொல்லப்பட்டாலும் எல்லைகளை நோக்கி நாம் முன்னேறுவோம்” என்று முகத்தில் பலஸ்தீன கொடியை வரைந்த 21 வயது இளைஞர் குறிப்பிட்டார். “நாம் வெளியேற மாட்டோம். எமது நிலத்திற்கு நாம் திரும்புவோம்” என்றும் குறிப்பிட்டார்.

மழைக்கு மத்தியிலும் அந்த முன்னரங்குப் பகுதியில் சுமார் 40,000 பேர் ஒன்றுதிரண்டு இருந்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் எல்லை வேலியில் இருந்து பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் விலகி இருந்தபோதும், சிலர் அந்த எல்லை வேலியை நோக்கி கற்கள் மற்றும் வெடிக்கும் பொருட்களை வீசி எறிந்தனர். கலகமடக்கும் நடைமுறைக்கு அமைய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க நடவடிக்கை எடுத்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பேரணி முழுமையாக அமைதியாக இடம்பெற்றதாக 34 வயது முஹமது ரித்வான் குறிப்பிட்டுள்ளார். “எமது மக்கள் தமது சட்ட ரீதியான உரிமையை பெறும் வரை பின்வாங்க மாட்டார்கள் என்பதற்கு இது ஆதாரமாகும்” என்று அவர் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத் தளம் எல்லை வேலியில் இருந்து தொலைதூரத்தில் இருந்ததாக 26 வயது பஹா அபூ ஷம்மால் குறிப்பிட்டுள்ளார். எனினும் இஸ்ரேலிய கண்ணீர்புகைக் குண்டுகளால் முச்சுத்திணறலுக்கு முகம் கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

அல் ஜஸீராவுக்கு கருத்துக் கூறிய அவர், “அனுபவித்துவரும் கொடிய முற்றுகையை நாம் முறியடிக்க வேண்டும். எமது ஆக்கிரமிப்பு நிலத்திற்கு நாம் திரும்ப வேண்டும்” என்றார்.

கடந்த ஓர் ஆண்டு காலமாக காசாவின் இஸ்ரேல் எல்லையை ஒட்டி பாரிய ஆர்ப்பாட்டங்கள் நீடித்து வருகின்றன. இங்கு பெரும்பாலும் இஸ்ரேல் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகளின் தாக்குதல்களில் 260க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 7,000 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இங்கு கொல்லப்பட்டவர்களில் 50 சிறுவர்கள் உள்ளடங்குவதாக சிறுவர்களை பாதுகாப்போம் உரிமைக் குழு குறிப்பிட்டுள்ளது. மேலும் 21 சிறுவர்கள் மூட்டுகள் அகற்றப்பட்டு பலரும் நிரந்தரமாக ஊனமுற்றிருப்பதாக அந்த அமைப்பின் பிராந்திய பணிப்பாளர் ஜெரமி ஸ்டோனர் குறிப்பிட்டுள்ளார்.

Mon, 04/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை