மதுஷ் நாடு கடத்தும் வழக்கின் தீர்ப்பு மே 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

மாக்கந்துரே மதூஷை நாடு கடத்துவது தொடர்பான தீர்ப்பை மே 02 ஆம் திகதிக்கு துபாய் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

தன்னை நாடு கடத்தினால் உயிர் அச்சுறுத்தல் ஏற்படுமெனக் கூறி மதூஷ் துபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நேற்று (18) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது.

இந்நிலையில் நேற்று இவ்விசாரணையை கவனத்திற் கொண்ட நீதிமன்றம் மதூஷ் முன்வைத்துள்ள மனுவுக்கான தீர்ப்பை மே 02 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்தது. இதுவரை மதூஷுடன் கைது செய்யப்பட்ட

23 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். எனினும் அவருடன் கைது செய்யப்பட்ட பாடகர் அமல் பெரேரா தொடர்பில் எவ்வித தகவல்களும் தெரியாமலிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இதேவேளை மதூஷூடன் துபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நேற்று அதிகாலை நாடு கடத்தப்பட்டனர்.இவர்கள் இருவரும் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நாடு கடத்தப்பட்ட மதூஷின் மைத்துனரான கம்புறுபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நிலான் ரொமேஷ் சமரசிங்க பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருப்பதால் விசாரணைகளுக்காக அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே நாடு கடத்தப்பட்ட பாடகர் நதீமல் பெரேரா நேற்று சிஐடிக்கு சமுகமளித்து நீண்ட நேரம் விசாரணைகளுக்குப் பின்னர் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடதக்கது.

லக்ஷ்மி பரசுராமன்

Fri, 04/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை