பண்டிகைக்கால பாதுகாப்பு; கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளில் 2400 பொலிஸார்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு உள்ளிட்ட அதனை அண்டிய சனநெரிசல் மிக்க பிரதேசங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் முகமாக 2 ஆயிரத்து 400 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர நேற்று தெரிவித்தார். 

இதேவேளை, இக்காலப்பகுதியில் குடிபோதையில் வாகனம் செலுத்துவதால் இடம்பெறக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதற்காக பத்து நாள் விசேட வேலைத்திட்டமொன்று இன்று (11) முதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 

வருடந்தோறும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியிலேயே அதிகமான வாகன விபத்துக்கள் இடம்பெறுவதால், அதனைத் தவிர்க்கும் முகமாக பொலிஸ் திணைக்களம் அதிகூடிய அக்கறை செலுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டினார். 

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு கூறினார்.  

கொழும்பு மற்றும் அதனை அண்டிய சுற்றயல் பகுதிகளில் கடந்த 05 ஆம் திகதி முதல் 2ஆயிரத்து 400 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுள் 1600 பேர் போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் எஞ்சிய 800 பேர் பாதுகாப்பு நிமித்தமும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் விளக்கமளித்தார். 

பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸார் வியாபாரங்களின்போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் முடிச்சுமாறிகளிடமிருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுவர் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். 

"சித்திரைப் புத்தாண்டு காலத்தில் அதிகமான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. இக்காலப் பகுதியில் வாகன விபத்துக்களால் 2016 ஆம் ஆண்டில் 268 பேரும் 2017 இல் 320 பேரும் 2018 இல் 296 பேரும் உயிரிழந்துள்ளனர்," என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் குடிபோதையில் வாகனம் செலுத்துவதால் 2016 ஆம் ஆண்டில் 56 ஆயிரத்து 835 பேரும் 2017 ஆம் ஆண்டில் 72 ஆயிரத்து 819 பேரும் 2018 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 05 ஆயிரத்து 94 பேரும் 2019 ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மட்டும் 19 ஆயிரத்து 342 பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.  சாரதிகள் குடிபோதையில் இருப்பதனை உறுதி செய்யும் சுவாசக் குழல்கள் 25 ஆயிரம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவை தற்போது நாடு முழுவதும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.  அத்துடன் பண்டிகைக்காலத்தில் பட்டாசு கொளுத்துவதால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் குறிப்பாக சிறுவர்கள் அவற்றை தனியாக கையாள்வதற்கு இடமளிக்க வேண்டாமென்றும் பொலிஸ் பேச்சாளர் கேட்டுக் கொண்டார். 

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் கடமைகளுக்காக நாடு முழுவதும் எண்ணாயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன ஏற்கனவே குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

(லக்ஷ்மி பரசுராமன்)  

Thu, 04/11/2019 - 10:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை