உக்கிரமடையும் லிபிய மோதல்: தலைநகருக்கருகில் 21 பேர் பலி

லிபிய தலைநகர் திரிபோலிக்கு அருகில் இடம்பெற்ற மோதலில் 21 பேர் கொல்லப்பட்டு மேலும் 27 பேர் காயமடைந்ததாக லிபியாவின் ஐ.நா அங்கீகாரம் பெற்ற அரசு குறிப்பிட்டுள்ளது.

மோதலை உடன் நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு திரும்பும்படி ஐ.நா செயலாளர் நாயகம் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

கலீபா ஹப்தரின் தலைமையிலான கிளர்ச்சிப்படை திரிபோலியை கைப்பற்றும் நோக்கில் கிழக்கில் இருந்து முன்னேறி வருகிறது. அவர் சதி முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக பிரதமர் பாயெஸ் அல் சர்ராஜ் குற்றம்சாட்டி இருப்பதோடு அந்த கிளர்ச்சியாளர்களை படையினர் எதிர்கொள்வார்கள் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் மோதல்களில் கொல்லப்பட்டவர்களில் செம்பிறை சங்க மருத்துவர் ஒருவரும் உள்ளார். தமது படையில் 14 போராளிகளை இழந்ததாக ஜெனரல் ஹப்தரின் படை குறிப்பிட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேறுவதற்காக இரண்டு மணி நேர யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு ஐ.நா அழைப்பு வித்தபோதும் மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. லிபியாவில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் சர்வதேச நாடுகள் தமது உறுப்பினர்களை வெளியேற்றி வருகின்றன.

2011 ஆம் ஆண்டு முன்னாள் சர்வாதிகாரி முஅம்மர் கடாபி ஆட்சி கவிழ்க்கப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து லிபியாவில் வன்முறைகள் மற்றும் அரசியல் ஸ்திரமற்ற சூழல் நீடித்து வருகிறது.

ஜெனரல் ஹப்தரின் இஸ்லாமியவாதிகளுக்கு எதிரான லிபிய தேசிய இராணுவத்திற்கு எகிப்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆதரவு அளித்து வருகிறது.

தனது படைகளை திரிபோலியை நோக்கி முன்னேறுவதற்கு ஹப்தர் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

லிபிய முன்னாள் சர்வாதிகாரி முஅம்மர் கடாபி ஆட்சியை பிடிப்பதற்கு ஒரு இராணுவ அதிகாரியாக உதவிய 75 வயது ஹப்தர், பின்னர் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து கடாபி அரசுக்கு எதிராக 2011 இல் கிளர்ச்சி ஏற்பட்டபோது ஒரு கிளர்ச்சித் தளபதியாக நாடு திரும்பினார்.

கடந்த வாரம் அவர் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்து மன்னர் சல்மான் மற்றும் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 04/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை