களுத்துறை மாவட்டத்தில் 2.1 இலட்சம் மக்கள் பாதிப்பு

களுத்துறை மாவட்டத்திலுள்ள களுகங்கை ஆற்று நீருடன் கடல்நீர் கலந்துள்ளதால் 2 இலட்சத்து 18 ஆயிரத்து 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. களுகங்கையின் நீர்மட்டமும் கணிசமானளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக களுகங்கையை அண்மித்த கடல் பரப்பிலிருந்து கடல் நீர் ஆற்று நீருடன் கலந்து வருகிறது.

இவ்வாறு ஆற்று நீருடன் கடல்நீர் கலந்துள்ளதால் 2,18,174 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் மேற்படி 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்குத் தேவையான குடிநீரை இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் விநியோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. என்றாலும் களுத்துறை பிரதேசத்தில்

வாழும் மக்கள் உரிய முறையில் தமக்கான குடிநீரை இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் விநியோகிப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர். பௌசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகின்ற போதிலும் அனைத்துப் பிரதேசங்களுக்கும் அது சென்றடைவதில்லை. அரசியல்வாதிகள் அவர்களுக்குத் தேவையான நபர்களுக்கு மாத்திரமே குடிநீரை பெற்றுக்கொடுப்பதாகவும் மக்கள்

குற்றஞ்சாட்டுகின்றனர்.

களுகங்கையானது கடலில் கலக்கும் கழிமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த மணல் திட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருந்த வெள்ளத்தால் உடைந்துள்ளது. இதனைப் புனரமைக்காததன் காரணமாகவே இந் நிலைமையை களுத்துறை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். வரட்சியான காலநிலை ஏற்படும் போது ஆற்றின் நீர்மட்டம் குறைவடையும் சந்தர்ப்பத்தில் கடல்நீர் ஆற்றில் கலந்து விடுகிறது.

கடந்த மூன்று வருட காலமாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் இந்த அவலத்தால் குளிப்பதற்குக் கூட மக்கள் இந்நீரை பயன்படுத்த முடியாத நிலையே தொடர்வதுடன் வரட்சியான காலநிலை மாறி மழை பெய்யும் வரை இந்நிலைமையை களுத்தறை மாவட்ட, பேருவளை பிரதேச செலயகத்திற்கு உட்பட்ட களுகங்கையை அண்மித்து வாழும் மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 04/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை