20: தோற்றால் ஜே.வி.பி சார்பில் வேட்பாளரை களமிறக்குவோம்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுகள் தோல்விகண்டால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு ஜே.வி.பி. சார்பில் ஒரு வேட்பாளரை உறுதியாக களமிறக்கவுள்ளதாக அக்கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அடுத்த கட்டமாக

ஜே.வி.பி. முன்னெடுக்கவுள்ள நகர்வுகள் குறித்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காக நாம் பல தரப்பினருடம் பேச்சுகளை நடத்தியுள்ளோம்.

ஐ.தே.கவினர் மற்றும் மகிந்த ராஜபக்ஷ தரப்பினருடன் அண்மையில் கலந்துரையாடியிருந்தோம். அடுத்த கட்டமாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டவர்களுடனும் சு.கவுடனும் பேச்சுகளை முன்னெடுக்கவுள்ளோம்.

20ஆவது திருத்தத்தை கொண்டுவரும் முயற்சிகள் தோல்வியடைந்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான பொது வேட்பாளரை ஜே.வி.பி. உறுதியாக களமிறக்கும். அதற்கானப் பேச்சுகளும் இடம்பெற்று வருகின்றன என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 04/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை