மட்டக்களப்பில் 20 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின்போது படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில், 20 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் சிகிச்சை முடித்துக்கொண்டு நேற்று (24) 11 பேர் வீடு திரும்பியுள்ளனர். 

நேற்று முன்தினம் (23)  28 பேர் சிகிச்சை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், 20 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த 21 ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அன்றையதினம் 69 பேரும் மறுநாள்  நான்கு பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக 73 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், வைத்தியர் தெரிவித்தார்.

அத்தோடு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய  உபகரணங்களுக்கு பற்றாக்குறை  நிலவுவதுடன், மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் வரவழைக்கப்பட்டு  காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

வைத்தியசாலையின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்த வைத்தியர், கடந்த 22 ஆம் திகதி காலைவரையில் வைத்தியசாலைக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் பாதுகாப்புகள் வழங்கப்படவில்லை எனவும் கூறினார்.  வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரே பாதுகாப்பினை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

(ஜவ்பர்கான் -மட்டக்களப்பு குறூப் நிருபர்)

Thu, 04/25/2019 - 14:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை