ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் 20 வருட சாதனையை புதுப்பித்த இலங்கை பெண்கள் அஞ்சலோட்ட அணி

15 ஆசிய மெய்வல்லுனர், 9 உலக முன்னணி சாதனைகள் தகர்ப்பு

23 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டியின் இறுதி தினமான 24ம் திகதி இடம்பெற்ற பெண்களுக்கான 4x400 அஞ்சலோட்டப் போட்டியில் 20 வருடங்கள் பழைய சாதனை ஒன்றை நேற்று முன்தினம் இலங்கை அஞ்சலோட்ட வீராங்கனைகள் புதுப்பித்துள்ளனர்.

அத்துடன் ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் 15 புதிய சாதனைகள் மற்றும் 9 உலக முன்னணி சாதனைகள் நிலை நாட்டப்பட்டுள்ளன.

கட்டார் கலிபா குளிரூட்டப்பட்ட சர்வதேச விளையாட்டு அரங்கில் கடந்த 21ம் திகதி முதல் 24ம் திகதி வரை நான்கு நாட்களாக நடைபெற்ற 23 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டி வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. இலங்கைக்கு முப்பாய்ச்சல் வீராங்கனை விசதுஷா பெற்றுக் கொடுத்த வெண்கலப்பதக்கத்தை தவிர வேறு பதக்கங்கள் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதது.

பெண்களுக்கான 4x400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் நிமாலி, நதிகா, டிலிசி மற்றும் உபமாலிக்கா ஆகியோர் (3.35.06) நிமிடங்கள் ஓடி நான்காம் இடத்தை பெற்றுக் கொண்டு 20 வருடங்கள் பழைமையான சாதனை ஒன்றை புதுப்பித்துள்ளனர்.

போட்டியில் சிறந்த முறையில் முதல் 100 மீற்றரில் கோலை மாற்றிய போதும் இறுதி தறுவாயில் ஜப்பான் வீராங்கனை சரியாக பயன்படுத்தி மூன்றாம் இடத்தை பெற்று ஈற்றில் இலங்கைக்கு 4ம் இடம் கிடைத்தது.

இந்த போட்டியில் பஹ்ரைன் அணி 3.32.10 நிமிடங்களை பெற்று முதலிடத்தை பெற்ற அதே நேரம் பஹ்ரைன் அணி வீரர்கள் கோலை சிறப்பாக மாற்றி இலங்கைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி முதலிடத்தை பெற்றனர். இரண்டாமிடத்தை இந்திய அணி பெற்றது, அவர்கள் 3.32.21 நிமிடங்களையும் பெற்றனர். மூன்றாமிடத்தை ஜப்பான் அணி 3.34.88 நிமிடங்களில் ஓடி பெற்றனர்.

அத்துடன் இறுதி நாளில் நடைபெற்ற ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட தமித் ஹேமந்த 11 ஆவது இடத்தை பெற்றார். அவர் 3.49.28 நிமிடங்கள் பெற்றமை விசேட அம்சமாகும்.

முதலிடத்தை பஹ்ரைன் வீரர் 3.42.85 நிமிடங்களில் ஓடியது. இரண்டாமிடத்தை இந்திய வீரர் 3.43.18 நிமிடங்களில் ஓடி பெற்றார். அத்துடன் போட்டியை நடத்தும் கட்டார் நாட்டின் வீரர் 3.43.19 நிமிடங்களில் ஓடி மூன்றாமிடத்தை பெற்றார். அத்துடன் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற கயந்திக்கா அபேரத்தன 11 ஆவது இடத்தை பெற்றார். அவர் 4.24.42 நிமிடங்களை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் முதலிடத்தை இந்திய வீராங்கனையும் அவர் 4.14.56 நிமிடங்களை பெற்றார். அத்துடன் இரண்டாமிடத்தை பஹ்ரைன் வீராங்கனை பெற்றார். அவர் 4.14.81 நிமிடங்களை பெற்றார்.

இந்த கலிபா மைதானத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் உலக மெய்வல்வல்லுனர் போட்டி இடம்பெறவுள்ளது.

கட்டாரிலிருந்து பரீத் ஏ.றகுமான்

Fri, 04/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை