2030 வரை 'சிசி' ஜனாதிபதியாக நீடிக்க எகிப்தில் சட்டத்திருத்தம்

எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி 2030 ஆம் ஆண்டு வரை அதிகாரத்தில் நீடிப்பதை அனுமதிக்கும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

சிசியின் இரண்டாவது நான்கு ஆண்டு தவணை வரும் 2022 ஆம் ஆண்டு முடிவடையவுள்ளது. இந்நிலையில் இந்தத் திருத்தத்தின் மூலம் அவரது தற்போதைய தவணை ஆறு ஆண்டுகளாக அதிகரிக்க அனுமதிப்பதோடு மற்றொரு தவணைக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கிறது.

எனினும் இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மீது 30 நாட்களுக்குள் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்திருத்தம் சிசிக்கு நீதித்துறையில் அதிக அதிகாரங்களையும், அரசியலில் இராணுவத்தின் தலையீட்டை நிலைநிறுத்தவும் வழிவகுக்கும்.

எகிப்தில் முதல்முறை ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதி முஹமது முர்சி மீது 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்கு தலைமை வகித்த சிசி, அது தொடக்கம் நாட்டில் ஒடுக்குமுறையை மேற்கொண்டு வருவதாக மனித உரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன.

சிசி 2014ஆம் ஆண்டு முதன்முதலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் அதன்பின் கடந்த வருடம் 97 வீத வாக்குகளுடன் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாராளுமன்றத்திலும் சிசிக்கு ஆதரவானவர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அதனை சிசியில் இரப்பர் முத்திரை என்று எதிர்த்தரப்பினர் விமர்சிக்கின்றனர்.

Thu, 04/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை