2020 இல் போதைப் பொருளை முற்றாக ஒழிக்க இலக்கு

769 கிலோகிராம் கொக்கேன் பகிரங்கமாக அழிப்பு

2020 ஆம் ஆண்டாகையில் எமது நாட்டில் இருந்து போதைப் பொருளை முற்றாக ஒழிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதனை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக பிரதான நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப உபகரணங்களை தருவிக்க கேள்வி மனுகோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட 769 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருளை பகிரங்கமாக அழிக்கும் நடவடிக்கை நேற்று களனி மகுருவெலயில் உள்ள சுரவீர களஞ்சியத் தொகுதியில் இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தலைமையில் சர்வதேச நியமங்களுக்கேற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியினதும் கல்கிசை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியினதும் முழுமையான மேற்பார்வையின் கீழ் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம், அபாயகர ஔடத கட்டுப்பாட்டுச் சபை மற்றும் இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வை நேரடியாக பொதுமக்கள் பார்ப்பதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

உரிய பரிசோதனைகளுக்குப் பின்னர் போதைப்பொருட்கள், இரசாயன பதார்த்தங்கள் அடங்கிய கொள்கலன்களில் இட்டு கரைத்து அழிக்கப்பட்டதுடன், அவ்வாறு இரசாயன திரவத்தில் கரைக்கப்பட்ட போதைப்பொருள் கொள்கலன் பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று புத்தளத்தில் உள்ள சீமெந்து கூட்டுத்தாபன வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அதிக வெப்பம் கொண்ட உளைகளில் இட்டு ஆவியாக்கப்பட்டது.

பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்று மக்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்சினைக்கு தீர்வாகவே ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி ஒருகொடவத்தையில் கண்டுபிடிக்கப்பட்ட 301 கிலோ 235 கிராம், 2016ஆம் ஆண்டு நவம்பர் 09ஆம் திகதி களனி பெத்தியாகொட பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 31 கிலோ 844 கிராம் கொக்கேனும் 2016ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் திகதி ஒருகொடவத்தை சுங்க கொள்கலன் தளத்தில் கைப்பற்றப்பட்ட கொக்கேன் 219 கிலோ 950 கிராம், மற்றும் 2018 ஜூன் 19ஆம் திகதி ரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் கைப்பற்றப்பட்ட 216 கிலோ 435 கிராம் கொக்கேன் ஆகியவையே இவ்வாறு பகிரங்கமாக அழிக்கப்பட்டன. இந்த நிகழ்வை பார்வையிட்டதன் பின்னர் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிக்கும் நிகழ்ச்சித்திட்டம் தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

நாட்டுக்கு கொண்டுவரப்படும் சட்டவிரோத போதைப்பொருட்களை கண்டறிவதற்கு உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழிநுட்ப உபகரணங்களை அடுத்த மாதம் இலங்கைக்கு கொண்டு வர தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் குறிப்பிட்ட அவர், ஐரோப்பிய நாடுகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே போதைப்பொருள் பாதிப்பை கட்டுப்படுத்தியுள்ளன. ஆனால் நாம் பாதுகாப்பு தரப்பினரின் அர்ப்பணிப்புடன் இங்கு அதனை கட்டுப்படுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தினூடாக போதைப்பொருள் பாதிப்பை கட்டுப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை வழங்குவதும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் தலதா அத்துகோரல, இராஜாங்க அமைச்சர்கள் அஜித் மான்னப்பெரும, ரஞ்சன் ராமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, சத்துர சேனாரத்ன, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பின் முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நமது நிருபர்

 

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை