200 மீ. பள்ளத்தில் பஸ் விழுந்து பொலிவியாவில் 25 பேர் உயிரிழப்பு

மேற்கு பொலிவியாவில் பஸ் வண்டி ஒன்று 200 மீற்றருக்கு மேற்பட்ட பள்ளத்தில் சரிந்து 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

லொர்ரி ஒன்றை முந்த முயன்ற பஸ் வண்டி முன்னால் வரும் மற்றொரு வாகனத்தில் மோதி பள்ளத்தில் விழுந்த இந்த விபத்தில் மேலும் 24 பயணிகள் காயமடைந்துள்ளனர். அதிக வேகமாக வானத்தை செலுத்தியதே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மோசமான வீதிக் கட்டமைப்புக் காரணமாக பொலிவியாவில் வீதி விபத்துகளில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழக்கின்றனர்.

டொடாய் என்ற நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த பஸ் வண்டி நிர்வாகத் தலைநகர் லா பாஸில் இருந்து அமேசன் நகரான ருரன்பக் நகரை நோக்கி உள்ளூர் நேரப்படி கடந்த ஞாயிறு இரவு பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் குறைந்தது இரு சிறுவர்கள் இருப்பதாக நெடுஞ்சாலை கண்காணிப்புத் தலைவர் பெர்காண்டோ ரொஜாஸ் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இதில் ஓட்டுநர் காயத்திற்கு உள்ளாகி இருப்பதோடு அவர் குறுகலான வீதியில் வீதிச் சமிக்ஞைகளை பொருட்படுத்தாமல் வாகனத்தை செலுத்தி இருப்பதாக ரொஜாஸ் குறிப்பிட்டுள்ளார். கயிறு கொண்டு கீழ் இறங்கியே மீட்பாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாக உயிர்தப்பிய ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி பொலிவியாவில் ஒவ்வொரு ஆண்டும் வீதி விபத்துகளில் சுமார் 1,000 பேர் உயிரிழப்பதோடு 40,000 பேர் வரை காயமடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Wed, 04/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை