"ரண் மாவத்" வேலைத் திட்டம்; 1970 கி.மீ வீதிகள் அபிவிருத்தி

ரூ. 20,000 மில். ஒதுக்கீடு 

'ரண் மாவத்' வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 1970 கிலோமீற்றர் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதற்காக 20,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷீம் தெரிவித்தார். 

பெருந்தெருக்கள் மாத்திரமன்றி கிராம மட்டங்களில் உள்ள வீதிகளும் இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. சகல தொகுதிகளிலும் உள்ள வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.  நெடுஞ்சாலைகள் அமைச்சில் நேற்று(09)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். சரியான வீதிக் கட்டமைப்பு இன்மையால் பெருந்தொகை பணம் வாகன நெரிசல்களால் இழக்கப்படுகிறது. கொழும்பு நகரில் மாத்திரம் நாளொன்றுக்கு 3 இலட்சம் வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் நாளொன்றுக்கு ஒரு பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகிறது. வாகன நெரிசலால் மாதமொன்றுக்கு 300 மில்லியன் ரூபா வீணாகிறது என மொரட்டுவ பல்லைக்கழகத்தின் கணக்கெடுப்பொன்று கூறுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு வாகன நெரிசலைக் குறைக்க வீதிக் கட்டமைப்பை புனரமைக்கவிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இவ்வருட இறுதிக்குள் அதிவேக நெடுஞ்சாலையில் 145 கிலோமீற்றர் இணைக்கப்படவுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் செப்டெம்பர் ஒக்டோபர் மாதத்தில் திறக்கப்படவுள்ளது. அது மாத்திரமன்றி அதிவேக நெடுஞ்சாலையின் வெளிச்சுற்றுவட்டப்பாதை இவ்வருட இறுதிக்குள் மக்கள் பாவனைக்கு வழங்கப்படவிருப்பதுடன், களனிப் பாலத்திலிருந்து பத்தரமுல்லை ஊடாக அத்துருகிரிய வரையில் தூண்களில் அமைக்கப்படும் வீதிக் கட்டமைப்பு இவ்வருட இறுதிக்குள் ஆரம்பித்துவைக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் கபீர் ஹாஷீம் குறிப்பிட்டார். 

இதற்குமப்பால் கொழும்பில் இரண்டு மேல் பாலங்களும், கண்டி கட்டம்பே பகுதியில் மற்றுமொரு மேம்பாலமும் அமைக்கப்படவுள்ளன.  

மலையகப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் சீரான வீதிக் கட்டமைப்பு இன்மையால் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். அங்குள்ள வீதிகள் சீரமைக்கப்படவிருப்பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளின் வீதிகளை புனரமைப்பதற்கு 2,950 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மனங்களை இணைக்கும் விசேட வீதி அபிவிருத்தி செயற்றிட்டமான 'ரண் மாவத்' திட்டத்தின் கீழ் விசேடமாக மதஸ்தலங்களுக்குச் செல்லும் வீதிகளின் அபிவிருத்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இந்த வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தேர்தலை இலக்குவைத்தவை அல்ல. மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்திசெய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படுபவை. கடந்த அரசாங்கத்தின் காலத்தைப்போன்று பலவந்தமாக காணிகள் சுவீகரிக்கப்பட்டு வீதிகள் அமைக்கப்படுவதில்லை. மக்களின் இணக்கப்பாடுகளுடனேயே வீதி விஸ்தரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வீதிகளை அமைக்க சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான 3500 கோடி ரூபா நஷ்டஈட்டை தமது அரசாங்கமே வழங்குகிறது என்றார்.  

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.   

(மகேஸ்வரன் பிரசாத்)

Wed, 04/10/2019 - 09:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை