பாகிஸ்தானில் பிரிவினைவாதிகளால் 14 பஸ் பயணிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் பலுகிஸ்தான் மாகாணத்தில் பஸ்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட குறைந்தது 14 பேரை துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். பதற்றம் கொண்ட இந்த மாகாணத்தின் பிரிவினைவாதிகள் நேற்று இடம்பெற்ற இந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளனர்.

இரண்டு டஜன் அளவு எண்ணிக்கை கொண்ட தாக்குதல்தாரிகள் துணைப்படையின் சீருடையை அணிந்திருத்ததாக மாகாண உள்துறை செயலாளர் ஹைதர் அலி ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

“மக்ரான் துறைமுக நெடுஞ்சாலையில் பஸ்களை நிறுத்திய அவர்கள் 14 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். கராச்சி நகரில் இருந்து ஒர்மாரா நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நான்கு பஸ் வண்டிகளே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பலொச் பிரிவினைவாத குழு ஒன்று இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இதில எந்த சிவிலியனும் கொல்லப்படவில்லை என்று அந்தக் குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கடலோர காவல் படை மற்றும் கடற்படை சேவை உறுப்பினர்களே கொல்லப்பதாக அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஆப்கான் மற்றும் ஈரான் நாட்டு எல்லையை ஒட்டி உள்ள பாகிஸ்தானின் வறுமை கொண்ட மாகாணமான பலுகிஸ்தான் நில அடிப்படையில் மிகப் பெரிய மாகாணமாகும். இங்கு இஸ்லாமியவாதிகள் போன்று பலொச் பிரிவினைவாதிகளும் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

கடந்த 2004 தொடக்கம் இங்குள்ள பிரிவினைவாதிகள் பாகிஸ்தான் இராணுவத்தின் இலக்காகி வருகின்றனர். இங்கு நிலவும் பாகுபாடுகள் குறித்து மனித உரிமை குழுக்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன.

Fri, 04/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை