14 மாவட்டங்களில் வரட்சி; 04 இலட்சம் பேர் பாதிப்பு

நாட்டின் 14மாவட்டங்களில் நிலவும் கடும் வரட்சி காரணமாக 4இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.  

இதற்கிணங்க ஊவா மாகாணம் தவிர்ந்த எட்டு மாகாணங்களைச் சேர்ந்த 14மாவட்டங்களில் வரட்சி நிலை தொடர்வதாகவும் இதனால் 99,226குடும்பங்களைச் சேர்ந்த 4,07,672பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்தது.  

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்காக தண்ணீர் பவுஸர் மற்றும் தண்ணீர் தாங்கிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அத்துடன் மாவட்டச் செயலாளர்களுக்கு தேவையான நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்தது.  

அம்பாறை, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, குருணாகலை, புத்தளம், கேகாலை, மாத்தளை, கண்டி, கம்பஹா, மாத்தறை, களுத்துறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 59பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேல் மாகாண மற்றும் வட மாகாணம் ஆகியன அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாணத்தின் கம்பஹா, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 46ஆயிரத்து 50084குடும்பங்களைச் சேர்ந்த 2,21,659பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கில் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 24,207குடும்பங்பளைச் சேர்ந்த 84ஆயிரத்து 656பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக களுகங்கையின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால் அமமாவட்ட மக்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் வடமேல் மாகாணத்தில் புத்தளம், மற்றும் குருநாகல் மாவட்டங்களில் 11,272குடும்பங்களைச் சேர்ந்த 39ஆயிரத்து 432பேரும் மத்திய மாகாணத்தில் கண்டிமற்றும் மாத்தளை மாவட்டங்களில் 9,160குடும்பங்களைச் சேர்ந்த 33,081பேரும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் 3791குடும்பங்களைச் சேர்ந்த 13,557பேரும் வடமத்திய மாகாணத்தில் பொலன்னறுவை மாவட்டத்தில் 2,028குடும்பங்களைச் சேர்ந்த 7,367பேரும் சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மாவட்டத்தில் 1523குடும்பங்களைச்சேர்ந்த 5,523பேரும் தென்மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் 647குடும்பங்களைச் சேர்ந்த 3,337பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்காக தண்ணீர் பௌஸர் மற்றும் தண்ணீர் தாங்கிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அத்துடன் மாவட்டச் செயலாளர்களுக்கு தேவையான நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.(ஸ)   

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Wed, 04/10/2019 - 07:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை