மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.115,000 நஷ்டஈடு

பருத்தித்துறை விசேட, யாழ். விசேட நிருபர்கள்

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளன.இதற்கான பணிப்புரையை யாழ்.மாவட்ட அரச அதிபர் விடுத்துள்ளார். இதற்கிணங்க ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா

தொடர் 1,15000 ரூபா வழங்கப் படவுள்ளன.சமுர்த்தி பாதுகாப்பு நிதியத்தின் இறப்பிற்கான கொடுப்பனவாக 15 ஆயிரம் ரூபாவும், இடர் முகாமைத்துவ அமைச்சின் கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவும் இக்குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தலைமையில் உடுவில் பிரதேச செயலர் ஜெயக்காந்,மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) முரளிதரன், வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அபராசுதன்,கிராம சேவகர், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் அடங்கிய குழுவினர் நேற்றுக் காலை 6 மணியளவில் சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்டதுடன்,உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கும் சென்றனர்.

இதன்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நஷ்டஈடு வழங்குமாறு அரச அதிபர் பணிப்புரை விடுத்தார்.மீதிக் கொடுப்பனவுகள் இறப்புச் சான்றிதழ்கள் கிடைத்ததும் வழங்கப்படவுள்ளன.

மேலும் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கான வீட்டுத்திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் வழங்குமாறும் அரச அதிபர் பணித்தார்.

இப்பகுதிகளில் அடிக்கடி மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்வதுடன், தொலைத்தொடர்பு கோபுரங்களில் பொருத்தப் பட்டுள்ள இடிதாங்கிகள் இயங்கு நிலையிலுள்ளதா? உரிய தரத்தில் அவை பொருத்தப்பட்டுள்ளதா என்பதை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கையெடுக்குமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவுக்கு அரச அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

 

Thu, 04/18/2019 - 06:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை