போக்குவரத்தில் 10 இலட்சம் முச்சக்கரவண்டிகள்

இறக்குமதியை கட்டுப்படுத்தல் அவசியம்  

நாட்டில் தற்போது ஒரு மில்லியன் முச்சக்கரவண்டிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதால்  முச்சக்கரவண்டிகளின் இறக்குமதியை மட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் நவீன் திசாநாயக்க நேற்று (03) பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.  

போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சினையாக உள்ள நிலையில் முச்சக்கரவண்டிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு,பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  

முச்சக்கரவண்டிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது போன்று மாணவர்களின் டியூஷன் வகுப்புக்களையும் மட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அதிகரித்த தனியார் வகுப்புக்கள் மாணவர்களுக்கு பெரும் சுமையாகியுள்ளன. அதனை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு மட்டுமாக ஏன் கட்டுப்படுத்த முடியாது. இவ்விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் 225உறுப்பினர்களும் ஒன்றிணைந்து தீர்மானம் மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறினார்.  

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது-  சீனாவின் ஹைனான் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கை இறப்பர் தொழிற்சாலைகளில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் 100அமெரிக்க டொலர் பில்லியனுக்கும் அதிக தொகையை முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.இது தொடர்பில் ஆராய்வதற்காக ஏப்ரல் (25) இல் என்னை சீனாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.  

மலேசியா, சிங்கப்பூர், கொரியா, சீனா ஆகிய நாடுகளின் நாணயப் பெறுமதிக்கும் அமெரிக்க டொலர்களுக்கும் இடையிலான இடைவெளி மிகக் குறைவு. ஆனால் எமது நாட்டில் அவ்வாறு இல்லாமை காரணமாகவே நாம் பொருளாதார ரீதியாக பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்து ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும்.  

தேயிலை ஏற்றுமதியைப் பொறு த்தவரை இந்தியாவும் சீனாவும் முன்னணி இடத்திலுள்ளன. எமக்கு போட்டியாக கென்யா இருந்து வந்தது.

தற்போது கென்யா மூன்றாம் இடத்திலும் இலங்கை நான்காம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. எமக்கு 75 சதவீதமான தேயிலையை சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களே பெற்றுத் தருகின்றனர். அவர்களுக்கு நாம் உர மானியம் வழங்குகின்றோம். அதற்கு மேலதிகமாக அவர்களின் அபிவிருத்திப் பணிகளுக்காக 02 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளோம்.  

'சிலோன் டீ' என்பது தூய்மையானதாக இருக்க வேண்டும். அதனுடன் சீனி கலப்படம் செய்வதனை ஏற்கமுடியாது. சீனி கலப்படம் செய்யக்கூடிய அளவை நாம் வரையறை செய்துள்ளோம். இது விஞ்ஞானரீதியாக முன்னெடுக்கப்பட்ட வரையறை. எனவே சீனி கலப்படம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு நாம் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அவர்கள் எனது அன்பான வேண்டுகோளை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதையும் நாம் இச்சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்,  லக்ஷ்மி பரசுராமன்)

Thu, 04/04/2019 - 08:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை