ரயில்வே ஊழியர்கள் 10,11ஆம் திகதிகளில் வேலை நிறுத்தம்

ரயில்வே தொழிற்சங்கங்கள் சில, இணைந்து எதிர்வரும் 10, 11ம் திகதிகளில் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணை அமைப்பாளர் லால் தெரிவித்தார். ஒன்பது தொழிற் சங்கங்கள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் தமது சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவையால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை, போக்குவரத்து அமைச்சு நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிராகவே இந்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார். 

இதேவேளை, அகில இலங்கை தனியார் பஸ் சங்கம் நாளை (09) செவ்வாய்க்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. 

வேகக் கட்டுப்பாடு தொடர்பில் நடைமுறைப் படுத்தவுள்ள தண்டப் பணம் தொடர்பில் கண்டனம் தெரிவித்தே, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக சங்கத்தின் பிரதம அமைப்பாளர் யூ.கே. ரேணுக்க ரெவித்தார். 

எனினும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமது சங்கம் கலந்துகொள்ளாதென  தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். 

தமிழ் – சிங்கள புது வருட காலத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது முறையற்றது என்றும், மக்களை இக்காலங்களில் அசௌகரியங்களுக்கு உட்படுத்துவது தமது சங்கத்தின் நோக்கமல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)   

Mon, 04/08/2019 - 09:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை