மொழிப்பாட ஆசிரியர் தட்டுப்பாட்டை நீக்க 1000 பேருக்கு நியமனம்

அமைச்சர் மனோ சபையில் அறிவிப்பு

பாடசாலைகளில் காணப்படும் மொழி ஆசிரியர்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஆயிரம் பேருக்கு மொழிப் பயிற்சியை வழங்கி ஆசிரியர்களாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கான ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பொறுப்பு தமது அமைச்சுக்கே வழங்கப்பட்டிருப்பதாவும், இதற்காக வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டுக்கு மேலதிகமான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு மற்றும் அபிவிருத்தி திறைமுறைகள், சர்வதேச வர்த்தக அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மனோ கணேசன் இதனைத் தெரிவித்தார்.

மொழிக்கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்தினால் தேசிய பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இவ்வாறான .நிலையில் பாடசாலை உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமது அமைச்சு முன்னுரிமை அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எமது அரசாங்கம் ஆட்சியை ஆரம்பிக்கும்போது புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும் என்ற பயணத்தையும் முன்னெடுத்திருந்தது. இதற்காக வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதும் துரதிஷ்டவசமாக இந்த நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கு தற்போதைய அரசியலமைப்பில் மொழிக் கொள்கை தொடர்பான சட்டம் மாத்திரமே ஆதரவாக உள்ளது.

மொழி தொடர்பில் அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் அரச கரும மொழிகளாக இருக்கின்றன.. தமிழை அரச மொழியாக செயற்படுத்துவதில் குறைபாடுகள் உள்ளன. இதனை நிவர்த்தி செய்வதற்கு பல செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

எமது அமைச்சின் கீழ் மொழிக் கற்கைகள் மற்றும் பயிற்சிகள் தொடர்பான தேசிய நிறுவனம் சிங்களம், தமிழ், ஆங்கிலம் தொடர்பான அறிவைக் கொண்ட ஆசிரியர்களைப் பயிற்றுவித்து உருவாக்குவதை நோக்காகக் கொண்டு செயற்படுகிறது. வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக இதற்கு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் காணப்படும் மொழி ஆசிரியர்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய 1000 ஆசிரியர்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தை பயன்;படுத்தவுள்ளோம். இவ்வாறு பயிற்றுவிக்கப்படும் ஆசிரியர்கள் கல்வி அமைச்சிடம் பாரப்படுத்தப்படுவார்கள். அதன் பின்னர் கல்வி அமைச்சு அவர்களுக்கான நியமனங்களை வழங்கும். இது தொடர்பில் கல்வி அமைச்சுடன் இணைந்து அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளோம்.

வடக்கு, கிழக்கில் உள்ள மாணவர்கள் தாம் சிங்கள மொழியைக் கற்க வேண்டும் எனக் கோருகின்றனர். அதேபோல தென்பகுதியில் உள்ளவர்கள் தமிழைக் கற்க வேண்டும் எனக் கேட்கின்றனர். இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

பிரிட்டிஷ் கவுன்சில் அண்மையில் வெளியிட்ட கணக்கெடுப்பின் முடிவுகளுக்கு அமைய புதிய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இரண்டாவது மொழியைக் கற்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மொழிப் பிரச்சினை குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம். பெயர் பலகைகளில் காணப்படும் மொழிக் குறைபாடுகள் குறித்த முறைப்பாடுகளைப் பெறுவதற்காக நவீன தொழில்நுட்பத்தையும் உள்வாங்கியுள்ளோம். சமூகத் தொடர்பாடல் மூலம் முறைப்பாடுகளைப் பதிவுசெய்ய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 04/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை