1000 ரூபா சாத்தியமற்றது; ரூ.50 பெற்றுக்ெகாடுப்போம்

1000 ரூபா சாத்தியமற்றது. அரசாங்கத்திடமிருந்து 50 ரூபாவைப் பெற்றுக் கொடுப்போம் என்றே தாம் கூறியிருந்தோம்.அதற்கமைய 50 ரூபாவை வழங்க அமைச்சர் நவீன் திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஐ. ம. சு. மு. எம்.பி. மஹிந்த அமரவீர உரையாற்றுகையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க முடியாதுபோனால் அமைச்சுப் பதவியைத் துறக்கப் போவதாகக் கூறியவர்களுக்கு 50 ரூபாவைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாமற் போயுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன் போது குறுக்கிட்ட அமைச்சர் திகாம்பரம், தாம் 50 ரூபாவைப் பெற்றுக்கொடுப்பதாகவே கூறியதாகவும் 1000 ரூபாவைப் பெற்றுக்கொடுக்கப் போவதாகக் கூறவில்லை என்றும் அது சாத்தியமில்லை என நாம் ஏற்கனவே கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அப்போது இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேசும் குறுக்கிட்டு மஹிந்த அமரவீர எம்.பி.யின் கூற்றுக்கு பதில் வழங்க முயன்றதால் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அமைச்சர் திகாம்பரம் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்; தமது அரசாங்கத்தின் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்காக எதையும் செய்யாதவர்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எதையெதையோ பேசுகிறார்கள் எனக் குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்த மஹிந்த அமரவீர எம்.பி, தாம் மலையகப் பகுதியைப் பிரதிநிதித்துவப்ப டுத்தாதவராக இருந்த போதும் அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி அம்மக்களின் அடிப்படைத் தேவைகள் பற்றி குரல் கொடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்,மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் மலையகப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டிருந்தன. இப்போது குறைகூறுபவர்கள் அப்போது நினைத்திருந்தால் தமது 10 – 15 வருட ஆட்சிக் காலத்தில் மலையகத்தை சிங்கப்பூராக்கியிருக்கலாம். 1000 ரூபாவல்ல, 2000 ரூபாவாகவும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்திருக்கலாம். அதைவிடுத்து எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு வெறுமனே பேசுவதில் பயனில்லை என்றும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

Thu, 04/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை