மித்திர சக்தி -VI பயிற்சியில் பங்கேற்க இந்திய இராணுவம் இலங்கை வருகை

இலங்கை இராணுவம் மற்றும் இந்திய இராணுவம் பங்குகொள்ளும் கூட்டு இராணுவப் பயிற்சி மார்ச் 26 இலிருந்து ஏப்ரல் 8 வரை தியத்தலாவையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டுப் பயிற்சி வருடாந்தம் இந்தியா மற்றும் இலங்கையில் ஒரு சுழற்சி முறையில் நடைபெறுகின்றது.

மித்திர சக்தி – V இந்தியாவின் புனே நகரில் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியில் 120 இலங்கை இராணுவத்தினர் பங்குபற்றினர். இந்த வருடம் 11 அதிகாரிகள் உட்பட,120 இந்திய இராணுவத் தொகுதியொன்று இலங்கை இராணுவத்துடன் இரண்டு வார கால பயிற்சியில் ஈடுபடுவதற்காக இந்திய விமானப்படை விமானம் IL76 இல் திங்கட் கிழமை (25) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

மித்திர சக்தி பிராந்தியத்தில் நடத்தப்படுகின்ற இராணுவத்திற்கு இராணுவம் எனும் ரீதியிலான பெரும் இரு தரப்பு பயிற்சியாகும். முன்னைய பயிற்சி நடவடிக்கைகளின் வெற்றியின் அடிப்படையில் மித்திர சக்தி அண்மையில் ஒரு படைக் குழு என்ற மட்டத்திலிருந்து ஒரு முழுமையான படைப்பிரிவு மட்டத்திலான ஈடுபடுதல் எனும் நிலைக்கு முன்னேற்றப்பட்டுள்ளது.

 இந்தப் பயிற்சியானது இரு தரப்பு இராணுவத்திற்கும் இடையில் இணைந்து செயலாற்றுதல் மற்றும் பரஸ்பரம் புரிந்து கொள்ளுதலை மேம்படுத்துவதற்கும் மற்றும் தொழில்சார் ரீதியான மதிப்பு, தனிப்பட்ட ரீதியான பிணைப்பு மற்றும் பரந்த பயிற்சி இடைத்தொடர்பு என்பவற்றின் அடிப்படையில் ஏற்கனவே உள்ள சுமுக உறவை கட்டியெழுப்புவதற்கும் வாய்ப்பை அளிப்பதற்குமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி நாடுகளுக்கிடையிலான பயங்கரவாதத்தைக் கையாளுதல், கூட்டு மூலோபாய செயலாற்றல் மற்றும் போர்த் திறன்களைக் உருவாக்குதல் என்பவற்றுக்கான ஆற்றல்களைக் கட்டியெழுப்புவதற்கு உதவும். இரண்டு இராணுவங்களினாலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக் கொள்ளுதல் மற்றும் ஒவ்வொருவரினதும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பவற்றுக்கான ஒரு சிறந்த தளத்தையும் இது வழங்கும். பயங்கரவாதம் மற்றும் ஏனைய பொதுவான அச்சுறுத்தல்கள் என்பவற்றுக்கெதிராக பயனுறுதியான வகையில் போராடுவதற்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளினதும் விருப்பங்களையும் இப்பயிற்சி குறிக்கின்றது.

இந்த வருடம் பயிற்சியின் பரப்பெல்லை கணிசமான வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் காலாட்படை அடிப்படையிலான நிகழ்வுகளிலிருந்து, பீரங்கிப் படை, பொறியியலாளர் பிரிவு, சமிக்கைப் பிரிவு, இராணுவ மருத்துவப் பிரிவு மற்றும் விசேட படையணி ஆகிய மட்டங்களிலிருந்தும் பங்குபற்றுவர்.

Wed, 03/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை