Tokyo Story

ஜப்பானிய இயக்குனரான யகஜிரோ ஒசுவினால் 1953ஆம் ஆண்டு இயக்கப்பட்ட உணர்வுமிக்க ஒரு படைப்புத்தான் Tokyo Story. ஒரு தாய் தந்தையின் உணர்வுகள், கிராமியத்தின் வாசனை, நரகங்களாகும் நகரங்கள் என பலதரப்பட்ட விடயங்களை இத்திரைப்படத்தின் ஊடாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

ஜப்பானிய கலாச்சாரத்தினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், புதுமையான பல நுட்பங்களை காட்சிப்படுத்திய படைப்பாகும். பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட தாயும், தந்தையும் அவர்கள் வெறுக்கின்ற நகர வாழ்வினுடைய போராட்டங்களும் மிக நேர்த்தியாக இத்திரைப்படத்தில் சொல்லப்பட்டிருப்பதினை நாம் அவதானிக்க முடியும்.

யுத்தத்திற்குப் பின் ஜப்பானில் மாறிப்பேயிருந்த மனிதபிமானம் பற்றியும், அங்கு நிலவுகின்ற மனித உரிமை மீறல்கள் பற்றியும் வித்தியாசப்பட்ட நெடிய ஒளிப்பதிவின் மூலம் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் யகஜிரோ ஒசு. இதில் மிக விசித்திரமான விடயம் யாதெனில் இத்திரைப்படத்தினுடைய ஒளிப்பதிவுதான். கதாபாத்திரங்கள் நகர்ந்து செல்லும் திரைக்கதைக்கு ஏற்ப கமெராவும் நகர்ந்து செல்வதும், ஜப்பானிய கலாசார முறைக்கு ஏற்ப காட்சியமைப்புக்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதும் Tokyo Story திரைப்படத்தினை உலக அளவிற்கு உயர்த்திச் சென்றதினை நாம் அவதானிக்க முடியும். கதையின் ஆழத்தினைத் தேடி நுகர்கின்ற பார்வையாளனின் கண்ணிற்கு குளிர்ச்சியான காட்சியமைப்புக்களுடன் உணர்வுகளைச் சொல்கின்றபோது அது எக்காலத்திலும் நீங்காத படைப்பாக மாறிவிடுகிறது.

ஒரு திரைப்படம் சிறந்த வெற்றியினை பெறுவதற்கு ஒரு இயக்குனர் உட்பட அடிமட்ட தொழிலாளிவரை அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதினை Tokyo Story உணர வைத்திருக்கிறது எனலாம்.

யதார்த்தங்களை காட்சிப்படுத்துகின்றபோது அது மக்கள் மனதினில் போலித்தன்மையினை உருவாக்காமல் உண்மையின் வெளிப்பாடாக அமைவதற்கு ஒரு திரைப்படத்தின் காட்சியமைப்பே பெரும் காரணியாக அமைவதினை நாம் அவதானிக்க முடியும். அவ்வகையில் மக்கள் நம்பிக்கையினை நிலை நாட்டுகின்றபோதுதான் அத்திரைப்படம் என்றும் அழியாத தன்மையினைப் பெறும். அவ்வகையில் யதார்த்தங்களை அழகிய காட்சிப்படுத்தலுடன் வெளிப்படுத்திய ஒரு சிறந்த திரைப்படம்தான் Tokyo Story.

Sat, 03/02/2019 - 10:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை