F3 கார் பந்தயத்தில் வெற்றிபெற்ற முதலாவது இலங்கையர் எஷான்

மலேசியாவின் சேபாங் சர்வதேச சுற்றுவட்டப்பாதையில் நடைபெற்ற ஆசிய வசந்தகாலத் தொடரின் ஆரம்ப மோட்டார் பந்தயப் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் எஷான் பீரிஸ் மீண்டும் ஒருமுறை இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இந்த வெற்றியானது F 3 வகையில் எஷானுக்கு முதலாவது வெற்றியாக அமைந்துள்ளது.

அப்சலூட் ரேசிங் சார்பாகக் கலந்துகொண்ட ஏஷான் வார இறுதியில் நடைபெற்ற முதலாவது போட்டியில் சிறந்த ஆரம்பத்தைப் பதிவுசெய்தார்.

இரண்டாவது தகுதிகாண் போட்டியில் தனது வேகத்தை தொடர்ந்தும் வெளிக்காட்டி ஐந்தாவது இடம் என்ற தனது சிறந்த முடிவையும் எட்டியிருந்தார்.

சனிக்கிழமையின் ஆரம்ப பந்தயப் போட்டியில் துரதிஸ்டவசமாக ஆறாவது நிலையிலிருந்த சக போட்டியாளரின் ஆக்ரோஷமான முந்தலால் எஷானை போட்டியிலிருந்து வெளியேற்றியது.

அன்றையதினம் நடைபெற்ற 8வது போட்டியில் ஆறாவது நிலையிலிருந்து ஆரம்பித்து சகல ஆபத்துக்களையும் தவிர்த்து ஐந்தாவதாகப் பூர்த்திசெய்து தகுதிபெற்றார்.

இந்தப் பந்தயத் தொடரில் ஆகக் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய போட்டியாக இது அமைந்ததுடன், ஆசியாவின் சிறந்த கார்பந்தய வீரர் என்ற பெயரையும் தனதாக்கிக் கொண்டார்.

தொடரின் இறுதிப் போட்டியில் எஷான் ஐந்தாவது கட்டத்திலிருந்து சிறந்த ஆரம்பத்தைப் பெற்று இரண்டாவது நிலைக்கு முன்னேறியபோதும், இரண்டாவது சுற்றில் தனது அணி வீரரான ஜீ ஜிபையிடம் அந்த இடத்தை இழந்தார். ஜீ ஜிபை மற்றும் அவுஸ்திரேலியாவின் ஜக் டூஹான் ஆகியோர் சிறந்த இடத்துக்காகப் போட்டியிட்டதுடன், 11வது சுற்றில் இரண்டு கார்களும் மோதியதால் ஜீ ஓய்வுபெறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

எப்பொழுதும் முன்னணியான வீரர்களைப் பின்பற்றும் எஷான், இந்தப் போட்டியில் தனது முதலாவது வெற்றியை உறுதிசெய்தார். இரண்டாவது இடத்தை அடைவதற்கு இரண்டு செக்கன்கள் மாத்திரமே எஞ்சியிருந்த நிலையில் அவர் முடிவுக் கோட்டைத் தாண்டியிருந்தார்.

பரிசளிப்பு நிகழ்வின் பின்னர் கருத்துத் தெரிவித்த எஷான், 'போட்டி மிகுந்த பந்தய வீரர்களுடன் இவ்வாறான வெற்றியைப் பெறுவது சிறந்ததொரு உணர்வைத் தருகிறது.

நான் இந்த வெற்றி குறித்து மாத்திரமன்றி, இத்தொடரில் வார இறுதியில் இடம்பெற்ற தகுதிகான் போட்டியில் எனது சிறந்த பெறுபேறு உள்ளிட்ட சகலவற்றையும் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். கார் சிறப்பாக செயற்பட்டிருந்தது இதற்காக அப்சலூட் ரேசிங் குழுவுக்கு நன்றி கூறுவதுடன் அவர்களுடன் இணைந்து செயற்படுவது பெருமையளிக்கிறது. எனது முகாமையாளர் அரோன் லிம் மற்றும் எப்பொழுதும் எனக்கு ஆதரவாக இருக்கும் பெற்றோருக்கும் நன்றிகூறுகின்றேன்.

இந்த வெற்றியானது எனது சகல ஆதரவாளர்களுக்கும், குறிப்பாக இலங்கைக்குத் திரும்பிய பின்னர் எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவரையும் சாரும்' என்றார்.

அப்சலூட் ரேசிங் அணியின் பணிப்பாளர் ஃபபியன் பியோர் கூறுகையில், 'வசந்த கால போட்டித் தொடரில் எஷான் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளார். இன்றைய அவருடைய வெற்றியானது சிறந்த இடத்தை வெளிக்காட்டுகிறது' என்றார்.

எப்.ஐ.ஏ இனால் சான்றழிக்கப்பட்ட F 3 ஆசிய சம்பியன்ஷிப் போட்டியின் புதிய தொடர் ஏப்ரல் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் மலேசியாவின் சேபாங்கில் நடைபெறும்.

ஆசிய சம்பியன்ஷிப் போட்டியின் ஐந்து நிகழ்வுகள் தாய்லாந்து, ஜப்பான் மற்றும் சீனாவில் அமைந்துள்ள எப்.ஐ.ஏ தரம் ஒன்று தடங்களிலும் நடத்தப்படும்.

ஒவ்வொரு சுற்றிலும் தலா மூன்று போட்டிகள் வீதம் அடுத்த வருடம் ஏப்ரல் முதல் செப்டெம்பர் வரை நடத்தப்படும்.

Tue, 03/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை