தோற்கடிக்கப்பட்ட இரு அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகளை மீள சமர்ப்பிக்க முடிவு

*ஆளுந்தரப்பில் எம்.பிக்கள் இல்லாததே தவறுக்கு காரணம்
*"தோற்கடிப்பால் 320 ரூபா தான் குறைவு ஏற்பட்டது"

தோற்கடிக்கப்பட்ட இரு அமைச்சுக்களினதும் நிதி ஒதுக்கீடுகளை மீள சமர்ப்பித்து நிறைவேற்ற இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.இரு அமைச்சுகளினதும் செலவுத் தலைப்புகள் தோற்கடிக்கப்பட்டதால் 320 ரூபா தான் குறைந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர் எமது தரப்பு எம்.பிக்கள் சபைக்குள் சமுகமளிக்காததால் இந்த நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

இரு அமைச்சுக்கள் மீதான செலவுத் தலைப்புகள் தோற்கடிக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சி எம்.பிக்களும் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இது தொடர்பில் நேற்று சபையில் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

மின்சாரம் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் பதில் வழங்குவார். மேலதிக மின்சாரம் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வாசிப்பில் இந்த அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. குழு நிலையிலே நிறைவேற்றப்படவில்லை. அதனை மீள சமர்ப்பிக்க முடியும். 320 ரூபா மாத்திரமே குறைந்துள்ளது. 2,312 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு நிறைவேறியுள்ளது. இந்த 320 ரூபாவும் இன்றி கூட செல்ல முடியும். எமது எம்.பிக்கள் சபையில் இருக்காததால் இந்த தவறு நடந்தது மீண்டும் திருத்தங்களும் நிதி ஒதுக்கீடு சமர்ப்பிக்கப்படும் என்றார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, எமது ஆட்சியில் ரத்னசிறி விக்ரமநாயக்க, தொண்டமான் போன்றோரின் நிதி ஒதுக்கீடுகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சபாநாயகர் எம்மை அழைத்து கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

தற்பொழுது இரு அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு தோல்வியடைந்துள்ளதால் அதனை குறுக்குவழியில் திருத்த முயல்வது தவறு.

பந்துல குணவர்தன (ஐ.ம.சு.மு)

இரு அமைச்சுகள் தோல்வியடைந்துள்ள நிலையில் வரவு செலவுத்திட்ட செயற்பாட்டில் பூரண மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சபாநாயகர் முன்னெடுக்கும் நடவடிக்கை குறித்து அறிவிக்க வேண்டும்.

அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல,

ஏப்ரல் 30 ஆம் திகதி வரை அமைச்சுக்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் நிதி ஒதுக்கீட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற முடியும். நிலையியற் கட்டளையின் பிரகாரம் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

பந்துல குணவர்தன எம்.பி,

சம்பளம் செலுத்துவது தொடர்பில் பிரச்சினை இருக்காது.ஆனால் சகல நிதி ஒதுக்கீடுகளும் தொடர்பான செலவுத் தலைப்புகள் இரத்தாகியுள்ளன. மீண்டும் அமைச்சரவை அனுமதி பெற்று இடைக்கால நிதி ஒதுக்கீடாகவே சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

 

Sat, 03/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை