தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் எரந்த, நிமேஷா சம்பியன்களாக தெரிவு

மலையக வீரர் வக்‌ஷானுக்கு வெள்ளிப் பதக்கம்

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் இவ்வருடம் ஏற்பாடுசெய்துள்ள 45ஆவது தேசியவிளையாட்டுவிழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் தலவாக்கலையைச் சேர்ந்த விக்னராஜா வக்‌ஷான் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

கடந்த வருடத்தைப் போல இம்முறையும் தேசிய நகவர்லஓட்டப் போட்டிகள் (03) நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றது. எனினும்,கடந்தகாலங்களைப் போன்று அல்லாமல் இம்முறைபோட்டிகளில் நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த வீரர்களும் பங்கேற்கும் வகையில் திறந்தமட்டப் போட்டிகளாக நடைபெற்றது.

10 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியில் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த எரந்ததென்னகோன் முதற்தடவையாக தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவுசெய்ய 33 நிமிடங்கள் 02.21 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார். 36 வயதான இவர்,கடந்த வருடம் நடைபெற்ற நகர்வல ஓட்டப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம்,மத்திய மாகாணம் தலவாக்கலையைச் சேர்ந்த விக்னராஜா வக்‌ஷான் போட்டியை 33 நிமிடங்கள் 21.96 செக்கன்களில் ஓடிமுடித்து வெள்ளிப் பதக்கத்தைவென்றார்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற 30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த வக்‌ஷான், இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் கடந்தவாரம் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் அவர் முதல்தடவையாக களமிறங்கினார்.

குறித்தபோட்டித் தொடரின் முதல் நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கு கொண்ட வக்ஷான்,போட்டியை 31 நிமிடங்கள் 03.78 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாவது இடத்தையும்,அதனைத் தொடர்ந்துநடைபெற்ற 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தையும் பெற்று தேசியமட்டப் போட்டிகளில் தனதுமுதல் வெற்றிகளைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவரும்,நடப்புச் சம்பியனுமானலயனல் சமரஜீவ போட்டியை 33 நிமிடங்கள் 55.38 செக்கன்களில் ஓடிமுடித்துவெண்கலப் பதக்கத்மையும் பெற்றுக்கொண்டார்.

பெண்கள் பிரிவில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நிமேஷா நந்தசேன போட்டித் தூரத்தை 41 நிமிடமும் 06 செக்கன்களில் நிறைவு செய்துதங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இவர் கடந்தவருடமும் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த அனூஷா லமாஹேவாபோட்டியை 41 நிமிடமும் 18 செக்கன்களில் ஓடிமுடித்துவெள்ளிப் பதக்கத்தையும்,சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த லங்கா ஆரியதாச போட்டியை 41 நிமிடமும் 41 செக்கன்களில் நிறைவுசெய்துவெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இம்முறை தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவும், இரண்டாம் மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுக் கொண்டவீரர்களுக்கு முறையே 40 ஆயிரம். 30 ஆயிரம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கிவைக்கப்பட்டன. இதன்போது, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

45ஆவது தேசியவிளையாட்டுவிழாவின் இறுதிப் போட்டிகள் இவ்வருட இறுதியில் கிழக்குமாகாணத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(பீ.எப் மொஹமட்)

Tue, 03/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை