ஜனாதிபதி -கென்யா வாழ் இலங்கையர்களுக்கிடையிலான சந்திப்பு

பொருளாதார ரீதியாக அபிவிருந்தியடைந்த, ஒழுக்கமிக்க சமுதாயத்தினர் வாழும் நாடாக இலங்கையை கட்டியமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்கி வருவதாகவும் ஜனாதிபதி  கூறியுள்ளார்.

கென்ய வாழ் இலங்கை மக்களை நைரோபி நகரில் நேற்றுமுன்தினம் (15) இரவு சந்தித்தபோதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐ.நா.வின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது அமர்வின் விசேட அதிதியாகக் கலந்துகொள்வதற்காக கென்யாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அந்நாட்டில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்காக சந்திப்பொன்றை நடத்தினார்.

கென்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் முக்கியமாக ஆடை உற்பத்தி, நீர்மின் உற்பத்தி, தோட்டக்கலை, மோட்டார் வாகனப் பயிற்சித் துறைகளில் பணியாற்றி வருவதுடன், பெரும்பாலானவர்கள் பல்வேறு வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த ஜனாதிபதி, தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கலந்துகொண்டோர் ஜனாதிபதியை  உற்சாகத்துடன் வரவேற்றதோடு, நினைவுப் பரிசொன்றையும் வழங்கினர்.

இலங்கையைச் சேர்ந்த மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளும் இதன்போது இடம்பெற்றன.

அங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,  இலங்கையில் சமாதானம் நிலை நாட்டப்பட்டு 2019ஆம் ஆண்டுடன் 10வருடங்கள் பூர்த்தியாவதாகவும் 'சமாதானத்தின் பத்தாண்டுக் கொண்டாட்டத்தை' எதிர்வரும் மே மாதம் மிக விமரிசையாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

நாட்டின் சமாதானம் மற்றும் அனைத்து இனங்களுக்கிடையிலும் இருக்க வேண்டிய நல்லிணத்தையும் சகோதரத்துவத்தையும் பேணிப் பாதுகாப்பதுடன், நல்லதொரு ஒழுக்கமிக்க நாடாக இலங்கையை முன்னேற்றத்தை நோக்கி கொண்டுசெல்வதே தனது குறிக்கோள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மனித இனத்தின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பக் கருவிகளை தவறான முறையில் பயன்படுத்துவதனால், இலங்கையைப் போன்று ஏனைய நாடுகளும் முகங்கொடுத்திருக்கும் சவால்கள் குறித்து நினைவுகூர்ந்த ஜனாதிபதி,  நியூஸிலாந்தில் இடம்பெற்ற துயர சம்பவத்திற்கும் சமூக ஊடகங்கள் காரணியாக அமைந்திருந்ததாக அறிக்கைகள் எடுத்துக் காட்டியுள்ளதாக தெரிவித்தார். அத்துடன்,  அண்மையில் இலங்கையில் கண்டி பிரதேசத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையில் வன்முறையை தூண்டுவதற்கு சமூக ஊடகங்களே முயற்சித்தன என்ற தகவல்கள் பதிவாகியுள்ளன எனவும் அவர்  தெரிவித்தார். எது எவ்வாறானபோதும், நவீன தொழில்நுட்பம் மனித சமுதாயத்தின் அழிவுக்காக அன்றி, வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுனில் டி சில்வா உள்ளிட்ட குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Sun, 03/17/2019 - 10:40


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக