கல்விச் சுற்றுலாச் சென்ற பஸ் கடுகண்ணாவயில் விபத்து

அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரி பயிலுநர் ஆசிரியர்கள் 45பேர் படுகாயம்

நடத்துநர் பலி

அட்டாளைச்சேனையிலிருந்து தர்காநகர் பகுதி​யை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியொன்று கடுகண்ணாவ- பஹல என்னும் இடத்தில் விபத்துக்குள்ளானதில் பஸ்சில் பயணித்த நடத்துநர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியிலிருந்து ஆசிரியர் பயிலுநர்களுடன் நேற்றுமுன்தினம்(05) கல்விச் சுற்றுலாவுக்காக பயணித்த வேளையிலேயே பஸ் வண்டி இரவு 8.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின்போது உயிரிழந்தவர் அம்பாறை மாவட்டம், பாலமுனை-04, ஹுசைனியா நகரப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது குடும்பஸ்தரான எம்.சி.முகம்மட் சாபீர் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரது மனைவி ஆறுமாத கர்ப்பினி எனவும் குடும்பத்தவர்கள் தெரிவித்தனர்.

மூன்று நாள் கல்விச் சுற்றுலாவுக்காக அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியர் பயிலுநர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், கல்விசார ஊழியர்கள் என 212 பேர் அடங்கிய குழுவினர் அட்டாளைச்சேனையிலிருந்து நான்கு பஸ் வண்டிகளில் புறப்பட்டனர். 4 பஸ் வண்டிகளும் ஒன்றன் பின் ஒன்றாக கடுகண்ணாவ பஹல பிரதேசத்தின் வளைவொன்றினூடாக சென்று கொண்டிருந்த வேளை விபத்துக்குள்ளான பஸ் வண்டியின் பிரேக் செயலிழந்ததனால் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் தடம் புரண்ட பஸ் வண்டியில் பயணித்த 45 பேர் காயங்களுக்குள்ளாகியதுடன் நடத்துநர் சம்பவ இடத்தில் பலியானார். சிறு சிறு காயங்களுக்கிலக்கான பயிலுநர் ஆசிரியர்களில் 34 பேர் மாவனல்லை வைத்தியசாலையிலும், ஒன்பது பேர் கண்டி போதனா வைத்தியசாலையிலும், இருவர் பேராதனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்டவர்களில் கணிசமானோர் சிகிச்சை பெற்று வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறிய போதிலும் பயிலுநர் ஆசிரியர் ஒருவருக்கு கையில் ஏற்பட்ட முறிவின் காரணமாக அவர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கல்விச் சுற்றுலாவுக்குச் சென்றவர்கள் மட்டக்களப்பு, சிகிரியா, கொழும்பு, இரத்மலான, விக்டோரியா, தர்காநகர் ஆகிய பிரதேசங்களுக்கு செல்லவிருந்ததாகவும், நேற்றுமுன்தினம் இரவு வேளையில் தர்கா நகர் தேசிய கல்வியற் கல்லூரியில் தங்குவதற்காக சென்றவேளையிலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்

Thu, 03/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை