கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் விளையாட்டுக் கழகம் வெற்றி

பெரியகல்லாறு வட்டபிளை விளையாட்டுக்கழகம் தனது 26வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பெரியநீலாவணை. கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு. விளையாட்டு கழகங்களிடையே பொதுவிளையாட்டு மைதானத்தில் ஞாயிறன்று (23) நடாத்திய இறுதிப் போட்டியில் கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் விளையாட்டுக்கழகம் பெரியகல்லாறு வட்டபிளை விளையாட்டுக் கழகத்துடன் மோதி 27 ஓட்ட வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஜே.ஜே சவால் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

கடந்த 2ந்திகதி முதல் நடாத்தப்பட்டுவந்த இந்த சுற்றுப்போட்டியில் அரையிறுதி போட்டி மற்றும் இறுதிப் போட்டி என்பன கழகத்தின் தலைவர் ஆர்.சி.அசோக்குமார் தலைமையில் ஞாயிறு பிற்பகல் நடைபெற்றது.

முதலாவது அரையிறுதிப் போட்டியில் கோட்டைக்கல்லாறு விளையாட்டுக்கழகம் இறுதிப்போட்டிக்கு தெரிவானது. இரண்டாவது அரை இறுதிப் போட்டி பெரியநீலாவணை வெஸ்ரேன் விளையாட்டுக் கழகத்திற்கும் பெரியகல்லாறு வட்டபிளை விளையாட்டுக் கழகத்திற்குமிடையே மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்று சமநிலையில் முடிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. சுப்பர் ஓவர் மூலம் போட்டி தொடாந்தது. இதில் வட்டபிளை விளையாட்டுக்கழகம் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய திருவள்ளுவர் விளையாட்டுக் கழகம் மிகவம் சிறப்பாக விளையாடி 51 ஓட்ட எண்ணிக்கை என்ற இலக்கை நிர்ணயித்தது.

பதிலுக்குத் துடுப்பெடுதாடிய வட்டபிளை அணியினரின் விக்கட்டுக்கள் துரிதமாக ஒன்றன்பின் ஒன்றாக சரியத் தொடங்கியது. இறுதியில் 23 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பலமான போட்டியாக இருக்குமென எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது பலத்த ஏமாற்றத்தை அளித்தது.

இப்போட்டியில் பிரதம விருந்தினராக மண்முனை தென் எருவில் பிரதேச சபை உறுப்பினர் ச.கணேசநாதனும், வெல்லாவெளி பிரதேச சபை உறுப்பினர் ச.குகநாதனும் நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர் அ.சுதர்சனும் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

 கல்லாறு தினகரன் நிருபர்

Thu, 03/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை