கிளிநொச்சி விளையாட்டுத் தொகுதி தர்ஜினி சிவலிங்கத்தினால் திறந்துவைப்பு

சர்வதேசதரத்திலான அனைத்து வசதிகளையும் கொண்ட கிளிநொச்சி விளையாட்டு தொகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் மற்றும் உள்ளக விளையாட்டு அரங்குகள் இலங்கையின் நட்சத்திர வலைப்பந்தாட்ட வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கத்தினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை(17) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மக்களின் வரிப்பணங்களைக் கொண்டுநாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் அரசியல் வாதிகளின் கரங்களினால் திறந்துவைக்கப்படுவது வழக்கம். அந்தவழக்கத்தை மாற்றி முதற்தடவையாக அரசியல்வாதியினால் பிரதம அதிதிக்கு வெற்றிலைக் கோப்பினை வழங்கி அபிவிருத்தி வேலைகளை திறந்து வைக்கின்ற முன்மாதிரியை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ செய்து காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது கடந்த 2011ஆம் ஆண்டு 325 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி விளையாட்டுத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் உரியகாலத்தில் நிறைவுக்கு வந்தாலும், சட்டசிக்கல்கள் காரணமாக அதனை மக்களின் பாவனைக்கு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

அதிலும் குறிப்பாக, இந்த விளையாட்டுத் தொகுதி 3 வருடங்களுக்கு முன் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், ஒரு சில நிர்வாக குறைபாடுகள். சட்டசிக்கல்கள் காரணமாக அது தடைப்பட்டிருந்தது.

கடந்த டிசம்பர் மாதம் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஹரீன் பெர்னாண்டோவின் அவதானத்துக்கு இது கொண்டு வரப்பட்டதையடுத்து அங்குள்ள குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து மக்களின் பாவனைக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைஎடுத்திருந்தார்.

இதன்படி, சகல வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டுத் தொகுதியில் 400 மீற்றர் ஓடுபாதையுடனான மைதானம், கால்பந்து, கிரிக்கெட் மைதானங்கள், உள்ளக அரங்குகள் மற்றும் நீச்சல் தடாகம் என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வடமாகாண வீரர்களின் மிக நீண்டகால தேவையாக இருந்த சகல வசதிகளையும் கொண்ட கிளிநொச்சி விளையாட்டுத் தொகுதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இதேவேளை, சர்வதேச தரத்திற்கமைய அனைத்து விளையாட்டுக்களையும் ஒரே இடத்தில் நடாத்தும் வகையில் அமைக்கப்பட்ட இந்த விளையாட்டுத் தொகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானமொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லும் இதன் போது நட்டிவைக்கப்பட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு, தொலைதொடர்பு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாடோ, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன், பாராளுமன்றஉறுப்பினர் மாவைசேனாதிராஜா, இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா ஆகியோர் இதற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தனர்.

இந்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இந்த விளையாட்டுத் தொகுதியை திறந்துவைப்பத்தில் பலமுரண்பாடுகள் காணப்பட்டன.

ஆனால் அவற்றையெல்லாம் முடிவுக்குகொண்டு இன்று அதனை திறந்துவைக்க முடிந்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கிளிநொச்சி விளையாட்டுத் தொகுதியைப் போல அனைத்து விளையாட்டுக்களையும் உள்ளடக்கிய விளையாட்டுத் தொகுதியொன்று இலங்கையில் எந்தவொரு பகுதியில் இல்லை.

இன்று இந்த விளையாட்டுத் தொகுதியை திறப்பதை கேள்வியுற்ற ஒருவர் 2011இல் தாங்கள் தான் அடிக்கல் நாட்டினோம் என சமூகவலைத்தளங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்துகொண்டிருந்ததை பார்த்தேன். ஆனால் இந்தவிளையாட்டுத் தொகுதியை திறந்து வைப்பதற்கு 9 வருடங்கள் சென்றன.

விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தினால் இந்தவிளையாட்டுத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான அனைத்து பொறுப்புகளும் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு வழங்கியிருந்தமையினால் பல முரண்பாடுகள் ஏற்பட்டன. இதனால் விளையாட்டுத்துறை அபிவிருத்திதிணைக்களம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தது.

நான் இங்கு அரசியல் பேசவிரும்பவில்லை. எனினும், இந்தவிளையாட்டுத் தொகுதியை அமைப்பதற்கு முன்நின்று செயற்பட்டவர்களுக்கு மன மார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது வடக்கில் உள்ள வீரர்களை சர்வதேச மட்டப் போட்டிகளில் பங்குபெறச் செய்யவேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பாக உள்ளது.

இங்குள்ள கால்பந்து மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்ற தொழிலதிபர் ஒருவர் முன்வந்துள்ளார். அதேபோல இங்குள்ள கிரிக்கெட் மைதானத்தையும் உடனடியாக அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

இங்குள்ள வீரர்கள் கிரிக்கெட் செயற்கை வலைகளில் விளையாடி வருகின்றனர். ஆனாலும், தற்போது வடமாகாணத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிவருகின்றனர். மிகவிரைவில் அவர்களுக்கான புற்தரை ஆடுகளங்களை இங்கு நாம் அமைக்கவுள்ளோம். அதேபோல, எதிர்வரும் 6 மாதங்களுக்குள் சுகததாச விளையாட்டரங்கைப் போல செயற்கை ஓடுபாதையை அமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கைஎடுப்போம்.

எமக்குள் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும், விளையாட்டில் மூலமாகத் தான் அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். எனது இலக்கு இன்னும் 5 வருடங்களில் தர்ஜினி சிவலிங்கத்தைப் போல இன்னும் 50 பேர் வடக்கிலிருந்து உருவாக்கவேண்டும். எனவே, அனைவரையும் ஒன்று சேர்த்துக் கொண்டு விளையாட்டை அபிவிருத்தி செய்வதுதான் எமது நோக்கமாகும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் பிரதமவிருந்தினரான தர்ஜினிசிவலிங்கம் உரையாற்றுகையில், இன்றையநாள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகும். இந்தவிளையாட்டுத் தொகுதியை திறந்துவைப்பதற்கு என்னை அழைத்தமைக்கு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாடசாலை காலத்தில் தடகளம் உள்ளிட்ட மெய்வல்லுனர் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் ஈடுபட்டாலும், நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக என்னால் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற முடியாமல் போனது.

2004ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தில் நான் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த சமயம், இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளராக இருந்த ட்ரிக்ஷி நாணயக்கார உள்ளிட்ட சம்மேளன அதிகாரிகள் என்னை இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் விளையாடுவதற்காக அழைப்பு விடுத்திருந்தனர். முதலில் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள நான் தயக்கம் காட்டினேன். ஆனாலும் எனது சித்தப்பாவின் முயற்சியினால் நான் கொழும்புக்குச் சென்று பயிற்சிகளை முன்னெடுத்தேன்.

உண்மையில் எமது வீரர்களுக்கு பயிற்சிகளை மேற்கொள்ள இப்பகுதியில் உள்ளக அரங்குகள் வசதிகள் இல்லாத காரணத்தால் கொழும்புக்குச் சென்று விடுதிகளில் தங்கியிருந்து, கடைச் சாப்பாடுகளை உட்கொண்டுமிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். அதே கஷ்டத்தை சுமார் ஒன்றரை வருடங்கள் நானும் அனுபவித்துள்ளேன். ஆனால், இன்று எமது மாவட்டத்துக்கென்று ஒரு விளையாட்டுத் தொகுதிகட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே இந்தவிளையாட்டுத் தொகுதியை எமது இளம் சந்ததியினர் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். என்னைப் போல, எதிர்காலத்தில் ஒலிம்பிக் உள்ளிட்டபோட்டிகளுக்குச் சென்று சர்வதேச மட்டத்தில் வெற்றிகளைப் பெற்றுக் கொள்கின்ற வீர,வீராங்கனைகள் வட பகுதியிலிருந்து உருவாக வேண்டும் என்பது தான் எனது ஆசையாகும் என தெரிவித்தார்.

(பீ.எப் மொஹமட்)

Wed, 03/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை