அமெரிக்க இராணுவ தளங்களுக்கு மிக அருகில் வாழ்ந்த முல்லா ஒமர்

ஆப்கானில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளங்களில் இருந்து நடக்கும் தூரத்திலேயே தலிபான் தலைவர் முல்லா ஒமர் வாழ்ந்து வந்ததாக புதிய புத்தகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முல்லா ஒமரின் இரகசிய வாழ்வு பற்றி எழுதப்பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தில், அமெரிக்கா நினைப்பது போல் அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக வாழவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லா ஒமரின் சொந்த மாகாணமான சபூலில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளத்தில் இருந்து வெறும் மூன்று மைல்கள் தூரத்திலேயே அவர் வாழ்ந்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் பெட் டாம், தலிபான் உறுப்பினர்களை பேட்டி கண்டு, ஐந்து ஆண்டு ஆய்வுக்கு பின்னரே இந்த் புத்தகத்தை எழுதியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் இருந்து வீழ்த்தப்பட்ட பின்னர் தலைமறைவான ஒமரின் மெய்க்காப்பாளர் ஜப்பார் ஒமரியையும் அவரால் பேட்டி காண முடிந்துள்ளது.

தலைமறைவாக வாழ்ந்த முல்லா ஒமர் 2013 ஆம் ஆண்டு சுகவீனமுற்று உயிரிழந்தார்.

செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின் ஒமரின் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டொலர்களை நிர்ணயித்தது. எனினும் தலிபான் வீழ்ச்சி அடைந்த விரைவில் இராணுவ தளத்திற்கு நெருக்கமான வீடொன்றின் இரகசிய அறைகளில் ஒளிந்துள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில் அமெரிக்கப் படை அந்த இருப்பிடத்தில் தேடுதல் மேற்கொண்டபோதும் அவர் மறைந்திருக்கும் இடத்தை கண்டுபிடிக்க தவறியதாக அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் அவர் சுமார் 1000 அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டிருக்கும் மற்றொரு அமெரிக்க தளத்திற்கு 3 மைல் தூரத்தில் இருக்கும் கட்டிடம் ஒன்றுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

Tue, 03/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை