பொரளை பொலிஸ் விபத்து; சட்ட மாஅதிபருடன் பேசவில்லை

சட்டத்தின் முன் உயர்வு, தாழ்வு கிடையாது

பொரளை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை சிறையிலடைப்பது மற்றும் விடுவிப்பது குறித்து ஆராய்வதற்காக சட்ட மாஅதிபர் அலரி மாளிகைக்கு வரவழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டதாக முன்வைக்கப் பட்டுள்ள குற்றச்சாட்டை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் மறுத்துள்ளார்.

சட்டத்தின் முன் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற வேறுபாடு இல்லையென சுட்டிக்காட்டிய பிரதமர், தவறிழைத்தோருக்கு பக்கச் சார்பின்றி நீதித்துறை தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைப்பிலான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, தன்னை சிறையிலடைத்து மகிழ்வது தொடர்பில் பிரதமர் கனவு கண்டு வருவதாகவும் பொரளை பொலிஸ் அதிகாரியின் விபத்துச் சம்பவத்தில் யாரை சிறையில் அடைக்கலாம் மற்றும் விடுவிக்கலாம் என்பது குறித்து சட்ட மா அதிபரை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் இலங்கையில் முதற் தடவையாக விபத்தின்போது பின்னால் சென்ற வாகனம் மீது வழக்குத் தாக்கல் செய்யப் பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு பதிலளித்தார்.

பொரளை பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் எவ்வாறான நியாயத்தை சட்டம் முன்வைக்கப் போகின்றதென முழு நாடும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அச்சம்பவத்துடன் மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பியின் மகன் தொடர்பு பட்டிருந்தாலும் அவர் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அச்சம்பவத்துக்கு பொறுப்பு கூற வேண்டும் என்றும் பிரதமர் பாராளுமன்றத்தில் கூறினார்.

இங்கு பிரதமர் மேலும் தெரிவித்ததாவது-,

யாரையும் சிறையிலடைப்பதோ, விடுவிப்பதோ எமது நோக்கமில்லை. இங்கு ஒரு வாகனம் பொலிஸ் உத்தியோகத்தரை மோதிச் சென்றபோதும் அதன் பின்னால் சென்ற வாகனம் அதனைக் கண்டும் அது தொடர்பில் பொலிஸில் முறையிடாமலும் காயமடைந்த பொலிஸாருக்கு உதவாமலும் சென்றுள்ளது.

இந்த இரண்டு சம்பவங்களும் பிழையானவை. அரசாங்கம் என்ற வகையில் எம்மால் இதுபோன்ற சம்பவங்களை ஏற்க முடியாது.

நாட்டு மக்கள் இதற்கான தீர்ப்பை எதிர்பார்த்து உள்ளனர். சட்டத்தின் முன்னால் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற வேறுபாடு இல்லை. இவ்விடயம் தொடர்பில் சட்ட மாஅதிபரை அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சு நடத்தவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

தனது மகன் இந்த விபத்துடன் சம்பந்தப் பட்டிருப்பதனால் மஹிந்தானந்த எம்.பி குழப்பமடைந்திருக்கலாம். எல்லாவற்றையும் விட நேற்று வாக்கெடுப்பு வெற்றியடைந்த வேதனை அவர் மனதில் உள்ளது. அந்த குழப்பத்தில்தான் அவர் பாராளுமன்றத்தில் சம்பந்தமில்லதாத விடயங்களை பேசுகின்றார்.

அனைத்து பிரச்சினைகளையும் தாங்கி பாராளுமன்றம் இன்று சீரான முறையில் நடைபெறுவதையிட்டு நாம் பெருமை அடைய வேண்டும். நேற்று 71 எம்.பிக்கள் எம்மை தோற்கடித்து அதிகாரத்தை பறித்து தனி அரசாங்கம் அமைக்க முயற்சித்தனர். இம்முயற்சி நிறைவேறாத வேதனையே அவர்களிடம் உள்ளன. மிளகாய்தூள் வீசியவர்களது சம்பளத்தில் ஆயிரம் ரூபாவை கழிக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

Thu, 03/14/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக