நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கட்சி பேதமின்றி அனைவரும் செயற்பட வேண்டும்

எதிர்வரும் ஐந்து வருட காலத்தை இலக்காகக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை இன்றுள்ள நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் செயற்பட வேண்டும். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினா் தயாசிறி ஜயசேகர நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 02 ஆம் வாசிப்பு மீதான 05 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் தொடர்ந்து கூறியதாவது:

நாடு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கடன்களில் இறுகிபோயுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையிலுள்ளது. பொருளாதார மாற்றுத் திட்டமொன்று தற்போது அவசியமாகின்றது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் 29 கடன் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

என்டர்பிரைஸ் சிறிலங்கா கடன் மூலம் எந்த வர்த்தகத்தையும் முன்னேற்ற முடியாது. இதன் மூலம் புதிய தொழில் முயற்சியாளர்கள் எத்தனை பேர் உரிவாகியுள்ளார்கள் என நான் கேட்க விரும்புகின்றேன். மேலும் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்று எமது மக்களை கடனாளியாக்குவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கமாகவுள்ளது.

ஏற்கனவே கடன் சுமையிலுன்னள்ள மக்கள் மேலும் கடனாளியாவதற்கு அரசாங்கத்தின் திட்டங்கள் வழிவகுக்கின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ன? வடக்கு, கிழக்கிலேயே மக்கள் அதிகளவில் நுண்கடன்களைப் பெற்றுள்ளனர்.

2017 இல் மாத்திரம் 263 பில்லியனை 39 நிறுவனங்கள் மூலமாக கிராமிய மக்கள் பெற்றுள்ளனர். இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெண்களே. இதனால் நுண்கடன் தொடர்பில் இலங்கைக்கு நிதி வழங்குவது நிறுத்தப்பட வேண்டுமென ஐ.நா வலியுறுத்தி வருகிறது. புதிய வர்த்தகர்களை உருவாக்குகின்றோம் எனும் போர்வையில் நாட்டில் மேலும் கடனாளிகளை உருவாக்கும் செயற்பாடுகளே இடம்பெற்று வருகின்றன.

ஐ.ம.சு.மு எம்.பி குமார வெல்கம

தேசிய கைத்தொழில் துறையை முன்னேற்றினால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். பண்டாரநாயக்க காலத்தில் ஞானம், தாச போன்றவர்கள் கைத்தொழில் முறையை முன்னேற்றுவதற்கு பெரும் பங்களிப்புச் செய்தனர்.

சீன அரசாங்கத்தின் திட்டத்தை இங்கு நடைமுறைப்படுத்தினால் நாம் 5.6 பில்லியன் நட்டப்படுவோம். சீனாவிலிருந்து நாம் 5.6 பில்லியனுக்கான பொருட்களை இறக்குமதி செய்யும் அதேவேளை இலங்கையிலிருந்து சீனாவுக்கு 02 பில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பாடசாலை மாணவர்களுக்கு கூப்பன் வழங்கத் தொடங்கியுள்ளமையால் எமது உள்ளூர் தொழிற்சாலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

ஐ.தே.க எம்.பி ஏ.எச்.எம் பெளசி

நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படுவதானது எந்தவொரு தனிநபரும் அந்த அதிகாரத்தை உபயோகிக்க வாய்ப்பளிக்காது. இம்முறை வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய திட்டமாகவும் அரசியல், பொருளாதார ரீதியில் சிறந்த முன்னேற்றத்தைக் கொண்டு வரும் திட்டமாகவும் அமைந்துள்ளது.

சாதாரண மக்களை பலப்படுத்துவதுடன் வறுமை நிலையிலுள்​ளோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த வரவு செலவுத் திட்டம் வழிவகுத்துள்ளது. அதேவேளை மக்கள் மீது சுமையை திணிக்காமல் அரசாங்கத்துக்கான வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எவரும் குறிப்பிடுவதைப் போன்று இது ஐ.தே.கவின் இறுதி வரவு செலவுத் திட்டமல்ல. மேலும் பல வரவு செலவுத் திட்டங்களை நாம் சமர்ப்பிப்போம். விவசாயிகள், மீனவர்கள், கைத்தொழிலில் ஈடுபடுவோர் உட்பட வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

சுற்றுச் சூழல் மாசு தொடர்பிலும் கசி​னோ ,மதுபானம், புகையிலை போன்றவற்றுக்கு அரசாங்கம் வரியை அதிகரித்துள்ளதானது வரவேற்றக்கத்தக்கது.

ஐ.ம.சு.மு எம்.பி அநுர பிரியதர்ஷன யாப்பா

தற்போதைய அரசாங்கம் 07 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்று என்ன செய்துள்ளது? எரிபொருள் விலை குறைவடைந்ததன் இலாபத்தை மக்களுக்கு அரசாங்கம் ஏன் பகிர்ந்நதளிக்கவில்லை? மக்களை ஏமாற்றுவதாகவே இம்முறை வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.

அப்துல்லா மஹ்ரூப் எம்.பி

நாட்டின் நிலைமை மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்காதவர்கள் இன்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்கள். ஆசிரியர்களுக்கும் படைவீரர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட்டிருப்பதற்காக நாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குதான் நாம் நன்றிகளை கூறவுள்ளோம்.

எமது பிரதேசத்தில் தொழில் பேட்டையொன்றை உருவாக்கி பலருக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கவுள்ளோம். இதற்காக அமைச்சர் றிசாட் பதியுதீனின் அர்ப்பணிப்புக்கும் நான் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.

​ஜெனீவா அமர்வுகளின்போது நாட்டுக்குள் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு விதமாக கோசங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. என்றாலும் நாட்டின் அனைத்து தேர்தல்களிலும் சிறுபான்மையினரின் வாக்குகள் அவசியம் என்பதை நாம் வலியுறுத்த விரும்புகின்றோம்.

சந்திராணி பண்டார எம்.பி

எமது அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்கள் நிறைவாகும் முன்னர் நாட்டில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளன. இது நல்லதொரு ஆரம்பமாகும்.

கடந்த 52 நாட்களை எம்மால் மறக்க முடியாது. இககாலத்தில் நாடு பின்நோக்கி கொண்டு செல்லப்பட்டது. அதற்கு காரணமானவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

நாட்டில் 52 சதவீதமானவர்கள் பெண்கள். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல அபிவிருத்திகளை செய்து கொடுக்க வேண்டும்

இம்ரான் மஹ்ரூப் எம்.பி

தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க இம்முறை வரவு செலவுத் திட்டம் பெரும் உந்துதலாக அமைந்துள்ளது. உயர்கல்வி பெற மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது வரவேற்க்கத்தக்க விடயம். இம்முறை காலத்துக்கு ஏற்ற வகையில் நவீனமயமான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுத் தராத, ஓய்வுதியத்தை அதிகரிக்காத தமது குடும்பத்துக்காக மட்டும் இலாபம் உழைத்தவர்கள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வருகின்றார்கள்.

கம்பெரலிய வேலைதிட்டத்தை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். அதில் கிராமத்துக்கு அவசியமான அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. என்டர்பிரைஸ் சிறிலங்கா எனும் வேலைத் திட்டம் இளைஞர், யுவதிகளுக்கு பெரும் பயனளிப்பதாக அமைந்துள்ளது.

எஸ்.எம் இஸ்மயில் எம்.பி

வீடு இல்லதவர்களுக்காக வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவது மிகச் சிறந்த விடயம். ஓய்வூதியம் அதிகரிக்கப்படுவதும் வயதானவர்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது. கம்பெரலிய வேலைத்திட்டம் கிராமங்களை பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. இளைஞர், யுவதிகள் பொருளாதார ரீதியாக முன்னோக்கிச் செல்வதற்கு என்டர்பிரைஸ் சிறிலங்கா உதவி செய்கிறது.

கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத் துறைக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை பெரும் திருப்தியையும் சந்தோஷத்தையும் வழங்குகிறது. பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tue, 03/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை