‘புளுமெண்டல் சங்க’ இராமேஸ்வரத்தில் கைது

- மன்னார் கடல் வழியே தப்பிச் சென்ற போது தமிழக பொலிஸாரால் மடக்கிப் பிடிப்பு
- ஆமி சம்பத்தும் இருப்பதாக விசாரணையில் தகவல்

பொலிஸ் விசேட அதிரடிப்படை உட்பட விசேட பொலிஸ் குழுவினரால் தேடப்பட்டு வந்த பாதாள உலக முக்கியஸ்தரான ‘புளுமெண்டல் சங்க’ இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடல் வழியாக படகொன்றின் மூலம் இந்தியாவுக்குச் தப்பிச் சென்ற போதே இராமேஸ்வரம் கடற் பகுதியில் வைத்து தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

‘புளுமெண்டல் சங்க’ உட்பட மேலும் இருவர் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டதாகவும் அவர்கள் இருவரும் யார் என்பது தொடர்பில் விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லையென பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முக்கியஸ்தரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் என். ஆர். லத்தீப் தெரிவித்தார். மன்னாரிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமைஇரவு இவர்கள் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றமை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.  

மனித படுகொலைகள்,கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காக இவர்கள் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தனர். ‘புளுமெண்டல் சங்க’ அல்லது ரணசிங்க ஆராச்சிலாகே சங்க சிரந்த என்ற இந்த நபர் தமது சகோதரனை படுகொலை செய்தவராவார்.

17 வயதில் இவர் பாதாள உலகத்தோடு தொடர்புகொண்டுள்ளவர். நாட்டின் முதல் தர பாதாள உலகத் தலைவரான பிரின்ஸ் கொலம் என்பவரோடு இவர் இணைந்து இருந்தார்.   

புளுமெண்டல் குப்பைமேட்டை தமது இராச்சியமாக வைத்துக்கொண்டிருந்த பிரின்ஸ் கொலம் 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இடம்பெறும்போது புளுமெண்டலில் வைத்து இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.  

அவரது படுகொலைக்கு பின்னர் பிளவுபட்டு போயிருந்த பாதாள உலக குழு ‘புளுமெண்டல் சஞ்சீவ’, ‘புளுமெண்டல் சங்க’ மற்றும் ‘ஆமி சம்பத்’ ஆகிய மூவரும் வேறு குழுவாக பிரிக்கப்பட்டு செயற்பட்டு வந்துள்ளனர்.  

இவர்களுள் சஞ்சீவ கதிர்காமம் யாத்திரையை மேற்கொண்டு மீள திரும்புகையில் துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார். இதனால் சங்க மற்றும் ஆமி சம்பத் ஆகியோர் போலிக் கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி துபாய்க்கு தப்பியோடினர். மீண்டும் 2015ஆம் ஆண்டு நாடு திரும்பினர்.  

தெமட்டகொட ஹிங்கம சந்தியில் 2016ஆம் ஆண்டு ‘தெமட்டகொட சமிந்த’ என்ற பாதாள உலக முக்கியஸ்தரை இலக்கு வைத்து சிறைச்சாலை பஸ் வண்டி மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டின் சூத்திரதாரிகளான சங்க மற்றும் ஆமி சம்பத் ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டன. இச்சம்பவம் தொடர்பில் கைது செய்வதற்காக ‘புளுமெண்டல் சங்க’வை பொலிஸார் தேடியபோது அவர் சட்டத்தரணிகள் மூலமாக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் துப்பாக்கியுடன் சரணடைந்துள்ளார். ஆமி சம்பத் என்பவர் கொம்பனி வீதியிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த தனது மனைவியை பார்க்க வந்தபோது கைது செய்யப்பட்டார்.  

இரண்டு வருடங்களுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னரே விடுதலையாகினர். கிராண்ட்பாஸ் கேம்ப் வத்த பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற களுபோவில நபர் ஒருவரை படுகொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளனர்.  

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் இருவரில் ஆமி சம்பத் இருக்கலாமென பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் தற்போது சர்வதேச பொலிஸ் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.(ஸ) 

Mon, 03/04/2019 - 09:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை